முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனிய கனவுகள்


சிறுகதை:                     இனிய கனவுகள்         
                    வே.ம.அருச்சுணன் – கிள்ளான்

ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்றாலும் வழக்கம் போலவே அகிலா காலையிலேயே எழுந்துவிட்டாள். கணவர் அமுதன் மகள் கண்மணி மட்டும் சற்று நேரம் கழித்து  படுக்கையிலிருந்து எழுவார்கள்.
காலை மணி ஒன்பது ஆகியிருந்தது.கண்மணி மட்டும் இன்னும் படுக்கைவிட்டு எழவில்லை.அவள் எழும்போது எழட்டுமே. அதற்குள் வேலையை முடிப்பதில் அகிலா சுறுசுறுப்பாகிப்போகிறாள் அகிலா.
“காலை வணக்கம்” என்று கூறியவாறு கணவர் சமையலறையை நோக்கி வருகிறார். வழக்கத்திற்கு மாறாக கணவர் அன்று நேரத்திலேயே எழுந்துவிட்டார்.
காலை வணக்கம்.....! அட... காலையிலேயே எழுந்துட்டிங்களே....? என்ன விசியம்? வெளியே எங்கும் போகனுமா?” சந்தேகம் மேலிடக் கேட்கிறாள்.
“அகிலா.... இன்னைக்கு உன்னோடு சேர்ந்து நானும் சமையல் செய்யலாமுனு நினைக்கிறேன்.....!”  கணவர் சிரிக்கிறார்
“நல்ல விசியம்தானே......வாங்க,வாங்க.....! ஒரு அசிஸ்டன் எனக்குக் கிடைச்சதுல  மகிழ்ச்சிதான்” அகிலா வாய்விட்டுச் சிரிக்கிறாள்.
வானொலியைக் கேட்டுக் கொண்டு வேலைகளைச் செய்வதில் அகிலாவுக்கு அலாதியான விருப்பம்.தமிழ்ப்பள்ளிக்குப் போகவில்லையென்றாலும் தினம் வானொலியில் ஒலியேறும் பல பயனுள்ள நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்வதில் மிகுந்த விருப்பமுடையவள்.
அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் அவளுக்கு விருப்பமான அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளைப் படைக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பாள். அவர்களின் இனிய குரலில் அழகுத்தமிழில் பேசும் அழகைக் கண்டு தேனுண்ட வண்டாய் மயங்கிப் போவாள்.அவர்களைப் போன்று தன்னால் பேச முடியவில்லையே என்று பல வேளை ஏங்கியதுண்டு! அவளுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளின் பட்டியலும் மிகவும் நீளமானது.
அன்றைய காலைப் பசியாறுதலுக்குப் பிரத்தியேகமாக அகிலா பூரியைக் கொதிக்கும் எண்ணையில் கவனமுடன் பொரித்துக் கொண்டிருந்தாள். பூரியைக் கிழங்குச் சட்னியுடன் சேர்த்து உண்பது கண்மணிக்கு மிகவும் பிடிக்கும். வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடன் அமர்ந்து, அமைதியுடன் மனைவியின் சிறப்புத் தயாரிப்பில் மலரும் காலைப் பசியாறுதலை ஒரு பிடி பிடிப்பதில்   கணவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் செல்லும் அழகைக் கண்டு அகிலா பூரித்துப் போவாள்.
“அம்மா சமையல் இன்னைக்கு சூப்பர்....சூப்பர்....!” மகள் கண்மணியும் அம்மாவைப் பாராட்டும் போது அகிலாவுக்கு கேமரன் மலை அதிகாலைப் பனியில் நனைந்தது போலாலிருக்கும்.
அப்போது, வானொலியில் தனக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர்,மகேந்திரன் குரல் கணிரென ஒலிக்கிறது. பெற்றோர்களே....! உங்கள் குழந்தைகளைத் தவறாமல் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். நமது தாய்மொழித் தமிழைக் காப்போம்; தமிழ்ப்பள்ளிகளைக் காப்போம்.விவேகமான உங்கள் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருக்கட்டும்! இந்த அறிவிப்பைக் கேட்டு அமுதன் ஒரு கணம் சிந்தனையில் மூழ்கிப்போகிறார். தொடர்ந்து, நாட்டுப்பிரதமர் நஜீப், நமது நாட்டில் இருபத்து நான்கு மணி நேர தமிழ் வானொலி செயல்படுவதை ஆங்கிலத்தில் பெருமையுடன் கூறுகிறார். பிரதமரின் அறிவிப்பு அமுதனை மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது. சில நிமிடங்கள் அமைதியில் மூழ்கிய, அமுதன் பேசத்தொடங்குகிறார்.
“அகிலா.....!ரேடியோவில  எப்போதும் தமிழைப்பற்றியும் தமிழ்ப்பள்ளியைப் பற்றியும் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கிறாங்களே என்ன விசியம்.....?நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏதும் ஆபத்து வந்துடிச்சா?”
“ஓ......அதுங்களா......தமிழ்ப் பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்கச் சொல்றாங்க........!”
“தமிழ்ப்பள்ளியில போதிய மாணவங்க இருக்கிறாங்கத்தானே.......?”
“நாட்டுல இருக்கிற 524 பள்ளிகளில பெரும்பாலும் பள்ளிகளிலே மாணவர்கள் பற்றாக் குறை நிலவுதாம்....!”
“ஓ......அப்படியா.....?”
“உண்மையைச் சொன்னா.....524 பள்ளிக்கூடத்துல முன்னூறு பள்ளியிலெ குறைஞ்ச எண்ணிக்கையிலதான் மாணவங்கப் படிக்கிறாங்கலாம்......!"
"உண்மையத்தான் சொல்றிய அகிலா....?" ஆச்சரியத்துடன் கேட்றார் அமுதன்.
"என் கூடா ஆபிஸ்ல வேலை செய்ற....சுகுணாதான் சொன்னாங்க. அவங்களோட இரண்டு பிள்ளைங்கப்  படிக்கிறப் பள்ளியில அம்பதுக்கும் குறைவான மாணவர்கள்தாம் படிக்கிறாங்கலாம்...!”
"அகிலா நீ என்ன சொல்ற? தமிழ்ப்பள்ளியில  மாணவர்கள் குறைச்சிட்டாங்கிறத என்னால நம்ப முடியல.....! "
"தோட்டத்த விட்டு வெளியே வேலைக்குப் போன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைங்களத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புறதில்ல.....! வேற்று மொழிப் பள்ளிக்குப் பிள்ளைகள அனுப்பிடறாங்க. யாங்க தமிழ்ப்பள்ளிக்கு உங்கப் பிள்ளங்கள அனுப்பலேனு?” காரணம் கேட்டா அதற்கு கெட்டிக்காரத்தனமா பதில் சொல்றாங்க...! “தமிழ் சோறு போடுமான்னு?” எதிர்கேள்வி கேட்கிறாங்க இவங்க போன்றவர்களாத்தான் தமிழ்ப்பள்ளிகளிலே மாணவர்கள் குறைஞ்சிப்போச்சி! நம்ம தாய்மொழியக் காப்பாத்தனுமேன்ற பொறுப்பு பல பெற்றோருக்கு இல்லாமப் போச்சு!” கொதி எண்ணையில் பொரியும் பூரியைப் போல அகிலா வார்த்தைகளால் பொரிந்து தள்ளினாள்!
நெருப்புச்சொற்களை அள்ளி வீசிய அகிலாவின் முகத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்  அமுதன். உணர்ச்சிப் பிழம்பாகிப் போன அகிலாவின் முகம் செவ்வாழையாகிப் போகிறது.முகத்தில் இறுக்கம் தெரிகிறது. ஆத்திரம் அவளை நிலை குழையச் செய்கிறது.அமுதன் இதனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை!
உண்மையின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட தாக்கத்தால் அகிலாவுக்கு ஏற்பட்ட கடுகடுப்பு அன்றைய காலைப் பொழுது துயரத்தில் கரைந்து போய்விடுமோ என்ற அச்சம் அமுதனின் உள்ளத்தில் தலையெடுக்கிறது.அகிலாவை ஆசுவாசப்படுத்த முயல்கிறார் அமுதன்.
அப்போது திடீரென வீல்லென்று அலரும் சத்தம் கண்மணியின் அறையிலிருந்து கேட்கிறது! பதறிப்போன கணவன் மனைவி இருவரும் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி விரைகின்றனர்.அறையில் அவர்கள் கண்ட காட்சி ஒரு கணம் அவர்களைத் திடுக்கிடச் செய்கிறது.குழந்தை படுக்கையிலிருந்து கீழே தரையில் விழுந்து கிடக்கிறாள்! படுக்கை விளிம்பில் மோதுண்ட குழந்தையின் நெற்றியிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது! 
பெற்றோரைக்கண்ட கண்மணி வேகமுடன் அழத்தொடங்குகிறாள்.அவளை அமுதன் அணைத்துக் கொள்கிறான்.அவசர அவரமாக முதலுதவி செய்கிறாள் அகிலா.போன உயிர் மீண்டது போல் இருவருக்கும்.நல்ல வேளை நெற்றியில் சிறிய காயம்தான்.இரத்தத்தைத் துடைத்துவிட்டு மருந்து தடவி பிளாஸ்டர் ஒட்டுகிறாள் அகிலா.பதற்றமுடன் காணப்படுகிறாள் கண்மணி.பெற்றோரின் அரவணைப்பில் வலி குறைந்த குழந்தை சிறிது நேரத்தில் வழக்க நிலைக்குத் திரும்புகிறாள்.அவள் முகத்தில் புன்னகை அரும்பிய போதுதான் பெற்றோர் முகங்களும் மலர்ந்தன என்றாலும் மூவரின் முகங்களிலும் ஒரு மெல்லிய சோகம் அந்தக் காலை நேரத்தில் இழையோடத் தவறவில்லை.  
“நான் குழந்தையக் குளிப்பாட்டி உடை மாற்றிட்டு வர்றேன். அகிலா.....நீ போயி பசியாற எடுத்து வை. மூனு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்....! பசி வயிற்றக் கிள்ளுது....!”
“குழந்தை நெற்றியில காயம் பட்டிருக்கு, கவனமா குளிப்பாட்டி உடை மாற்றம் செஞ்சிட்டு சீக்கிரமா சாப்பிட வாங்க. ஒரு நொடியில பசியாற எடுத்து வைக்கிறேன்!” அகிலா சமையல் அறையை நோக்கி விரைக்கிறாள்.
சூடு பறக்க மேசையில் வைக்கப்பட்ட பூரி சுவையான கிழங்குச் சட்டினியில் தொட்டுக் கொண்டு மூவரும் சாப்பிடத் தொடங்குகின்றனர்.தனக்கு ஏற்பட்ட காயத்தின் வலியையும் பொருட்படுத்தாமல் அம்மா தயாரிப்பில் உருவான பூரியைத் தட்டிலிருந்து எடுத்து கண்மணி  ருசித்துச் சாப்பிடுகிறாள்.பெற்றோர்,ஆசையோடு பெற்றெடுத்த தங்கள் ஒரே செல்ல மகள் சாப்பிடும் அழகைக் கண்டு ரசிக்கின்றனர். வாஞ்சையோடு பெற்றோர் இருவரும் மகளுக்குப் பூரியை மாறி மாறி ஊட்டி விடுகின்றனர். குழந்தை மகிச்சியுடன் காலை உணவைச் சாப்பிடுகிறாள்.தலையில் அடிபட்ட காயத்தின் வலியைக்கூட மறந்து சிரிக்கிறாள் குழந்தை.
வானொலியில் ஒலியேறிக்கொண்டிருந்த இனிய பாடலுக்குப் பின் வாராந்திர இலக்கிய நிகழ்ச்சி அமுதேதமிழே ’ ஒலியேறத் தொடங்கியது.இலக்கிய நிகழ்ச்சியின் தொடக்க ஒலியைக் கேட்டதுமே அகிலா புத்துணர்ச்சி பெற்றவள் போல் புன்முறுவல் பூக்கிறாள். மகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்தையும் மறந்து இலக்கிய  நிகழ்ச்சியில் அவள் கவனம் செல்கிறது.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த விரிவுரையாளர் பொன்முகம், செம்மொழியான தமிழின் சிறப்பையும் தமிழர்கள் மொழியைக் காக்க வேண்டியதன் அவசியத்தைத்தைப் பற்றிய உரை இடம் பெறுகிறது.
நிகழ்ச்சியின் முதல் அங்கத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அமுதன் தொடர்ந்து இடம் பெற்ற அங்கங்கள் அனைத்தையும்  அமுதன் அமைதியுடன் கேட்கிறார்.
“தமிழ்மொழி இவ்வளவு இனிமையான மொழியா?”ஆச்சரியமுடன் கேட்கிறார்.  
“தமிழ்மொழி இனிமையானது மட்டுமில்லங்க,உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ். அதுமட்டுமில்லிங்க....உலக மக்களால் அதிகமாகப் பேசப்படும் ஆறு மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்னுங்கிற உண்மையையத் தெரியாம நம்மவங்க  ஆங்கில மொழியிலப் பேசறதப் பெரிய கௌரமா நினைச்சிட்டு, வீட்டுலக்கூடத் தமிழ்ப்பேசுறது கேவலம்னு நினைக்கிறாங்களே அவர்களை எண்ணிப்பார்க்கும் போது, வருத்தமா இருக்குங்க...!”
“நாம சொல்லி யாரும் மாறப்போறதில்ல....!”
“கண் முன்னால நடக்கிற அநீதியப் பார்த்திட்டு சும்மா இருக்க முடியுமா? தாய்மொழி வளர்ச்சிக்குத் தடையா இருக்கிறவங்கள நாம சும்மா விடலாமா? மொழி அழிஞ்சா ஓர் இனம் அழியும்போது நாம சும்மா இருக்க முடியுமா? உண்மைய யாரு வேண்டுமானாலும் சொல்லலாம். ஞாயம்னு தெரிஞ்சா அத தட்டிக் கேட்கனும். மொழிக்குச் சொந்தக்காரங்க நாம.  ஞாயத்துக்காகப் போராடனும்.மொழியைக் காப்பாற்றும் வேலையில நாம ஏனோதானோன்னுன்னு இருக்க முடியாது!”
அப்போது கைபேசி ஒலிக்கிறது. அழைத்தவரின் எண்களைப் பார்க்கிறார். மிகவும் பரிட்சமமான எண்தாம். மலேசிய வானொலி,மின்னல் எப்.எம்.பண்பலையிலிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க எனும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் அனங்க சுந்தரி தொடர்பில் இருந்தார்.முதல் நாளே அவர் தொடர்பு கொண்டது அகிலாவுக்கு நொடிக்குள் நினைவுக்கு வருகின்றது.
“வணக்கங்க அகிலா, நலமா இருக்கீங்களா....!”
“வணக்கங்க அனங்க சுந்தரி.நான் நலமா இருக்கேன்.....!”
“இன்றைய நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றி நேயர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள விரும்புகிறோம். தமிழ் மொழியின் வளர்ச்சி இந்நாட்டில எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“நம்ம நாட்டுல தமிழ் மொழியின் வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும் என்பதில சந்தேகமே இல்லே!”
“நன்றாக இருக்கும்னு நீங்கசொல்றீங்க ஆனா....ஒரு சிலர் தமிழ்மொழிக்கு இந்நாட்டுல எதிர்காலம் இல்லைன்னு சொல்றாங்களே....?”
“பல இனங்கள் வாழ்ற இந்த நாட்டுல,தாய்மொழிக் கல்வியை எல்லா இனங்களும் கற்பதற்கு அரசாங்கம் எல்லா காலங்களிலும் ஊக்குவித்து வந்துள்ளது.புதிய கட்டிடங்கள் கட்டித்தருவதுடன்,பள்ளிகளை நிர்வகிக்க நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது. அரசாங்கம் உறுதி கூறியது போல் இந்த ஆண்டு புதியதாக ஒரு தமிழ்ப்பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிக் கொடுப்பதற்கான ஆக்கப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்தாண்டு இறுதிக்குள் பல புதிய பள்ளிகளை நாம  பார்க்கவிருக்கிறோம்.”
“அகிலா....நாட்டு நடப்புகளை நன்றாக அறிந்து வைத்திருக்கிறீங்க...!அதற்காக உங்கள தாராளமா பாராட்டலாம்.....! அகிலா....மேலும் ஒரு கேள்விய கேட்கலாமுனு  நினைக்கிறேன்....!”
“ஓ.....தாராளமா கேளுங்க.....! என் கருத்துக்களைத் தங்களோடு பகிர்ந்து கொள்றதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி....!”
“அரசாங்கம்....நமக்கு வழங்குற இந்த வாய்ப்புகளை நமது பெற்றோர்கள் எப்படி பயன் படுத்திக்கொள்றாங்க......?”
“தமிழ்ப்பள்ளிகள் யூ பிஎஸ் ஆர். தேர்வுல பல சாதனைகள் படைத்து வர்ராங்க. தமிழ்ப்பள்ளியின் கல்வித்தரம் மிகவும் பாராட்டும் வகையில் இருக்கின்றது.பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகள் மீது முழு நம்பிக்கை வைத்து தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களின் எண்ணிக்கை இப்போது பெருகி வருது.இங்கே, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பு அம்சம் என்னவென்றால்,நம் இனத்தில் நன்கு படித்தவர்கள், குறிப்பாக மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மற்றும் தொழில் மேதைகள் ஆகியோரின் பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளிகளில் பயிலத்தொடங்கியுள்ளனர்.இது ஒரு நல்ல தொடக்கம்”
“மிக்க....மகிழ்ச்சி அகிலா....! நீங்க என்ன நினைக்கிறீங்க  எனும் நிகழ்ச்சியில் இதுவரையில்  பல அரிய கருத்துகளை எங்களோடு  பரிமாறிக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!”
“வாய்ப்பு கொடுத்த உங்களுக்கும் மின்னல் எப் எம் பண்பலைக்கு மிக்க நன்றி!”
“அடே....அப்பா பிச்சு வாங்கிற அகிலா.....!” அகிலாவின் பேட்டியைக்கேட்டு கணவர் அசந்து போகிறார். 
“எங்கம்மா.....பேட்டி கொடுக்கிறதுல எப்பவும் சூப்பர்தான்.......!” கண்மணி அம்மாவைப் புகழ்கிறார்.
அகிலா மகளைக் கட்டிப்பிடித்துக்  கன்னத்தில் முத்தமிடுகிறாள். தாயும் பிள்ளையும் மாறி மாறி கன்னத்தில் முத்தமிடுவதைக் கண்டு மகிழ்கிறார் அமுதன்.
“ஆ....சொல்ல மறந்துட்டேன்....!”
“எதை சொல்ல மறந்துட்டே....?”
“இன்று மாலை ஆறு மணிக்கு நம்ம குடியிருப்பு பகுதியில் இருக்கிற,பொது மண்டபத்துல மின்னல் எப்.எம்.பண்பலையின் அறிவிப்பாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சி நடத்துராங்க.இதில, மலேசிய வானொலி மின்னல் எப் எம் பண்பலையின் தலைவர் திரு.எஸ்.குமரன் அவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.....!”    
“வாவ்......நல்ல வாய்ப்புதான்!வானொலியில கலக்கிற பல அறிவிப்பாளர்களோட திறமைய இன்றைக்கு நேரில காணப்போறோம்....! இன்றைய ஞாயிறு நல்ல பொழுதாக அமையப்போவுதுன்னு சொல்லு.....!”
“அவர்கள் இங்கு வர்ர நோக்கம் நேயர்கள நேரில் சந்தித்து  மகிழ்ச்சிப் படுத்துவதோடு இல்லாம, நமது தாய்மொழி தமிழின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன்,இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்யப் போறாங்க......!” வானொலியில் செய்யப்படும் அறிவிப்பு போன்று அகிலா செய்த விபரத்தைக் கேட்டு வாய் அடைத்து நிற்கிறார் அமுதன். 
அந்தக் குடியிருப்பில் பல ஆண்டுகளா குடியிருந்தவர்கள்,வியந்து போகுமளவிற்கு,மக்கள் கூட்டம் கூடியிருந்தது.பெரியவர் முதல் சிறியவர்கள் வரையில் மக்கள் வெள்ளம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.அகிலா,அமுதன் மகள் கண்மணி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
அந்தக் குடியிருப்பில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியில் பல நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று எனினும்,அங்கு நடை பெறும் எந்தவொரு நிகழ்காக இருப்பினும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே பங்கேற்பாளர்களின் வருகை அமைந்திருக்கும். பல வேளைகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிக்கு மக்களைத் திரட்டுவதில் மனம் நொந்து போவார்கள்.
அந்தக் குடியிருப்பில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியில் பல ஆண்டுகளாகத் தலைமையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் தமிழன்பன் அவர்களும் அந்நிகழ்வுக்கு வருகை புரிந்திருந்தார்.அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்போது வானொலியில் அறிவிப்பாளராக இருக்கும் பாலசேனா அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் அவர் வருகை புரிந்திருந்தார்.
அன்று மாலை குறித்த நேரத்தில், மின்னல் எப் எம் அறிவிப்பாளர்களின் நிகழ்ச்சி நடை பெறுகிறது.தினம் காலை வேளைகளில் இடம் பெறும் காலைக்கதிர் எனும் கலக்கல் நிகழ்ச்சியைப் படைக்கும் அதே தெய்வீகன் தாமரைச்செல்வன் மற்றும் இரவின் இருவரும் இணைந்து அறிவிப்புப் பணிகளை மிகவும் கலகலப்புடன் செய்தபோது வருகையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே செல்கின்றனர்.
அறிவிப்பாளர்களில் பலர் நேயர்களோடு ஆடியும் பாடியும் தங்களின் திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர்.நிகழ்வுகளை தலைவர் திரு.எஸ்.குமரன் அமைதியுடன் கண்டு களித்துக் கொண்டிருந்தார்.
சிறப்பு நிகழ்வாக தலைவர் திரு.எஸ்.குமரன் தலைமையில் நடைபெற்றது.தலைவருக்கே உரித்தான தலைமைத்துவப் பாங்குடன் நிகழ்ச்சியை வழி நடத்தினார்.
 இந்நாட்டில் தமிழ் மொழியும் அதன் வளர்ச்சியும் எனும் தலைப்பில் குமரன் உரையாற்றினார்.நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அவரது உரையை     அமைதியுடன் கேட்டனர்.பலர் தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தலைவரிடம் கேட்டு தெளிவு பெறுகின்றனர்.தமிழின் மேன்மை குறித்து மக்களுக்குத்தெரிவிக்கும் வகையில் மலேசிய வானொலியின் இத்தகைய நிகழ்வு தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற வேண்டு என்ற வேண்டுகோளையும் பலர் தலைவரிடம் முன்வைத்தனர்.
தமிழ்மொழியை  வளர்ப்பதில் தமிழ் வானொலிக்கும் பங்கு உண்டு என்பதைக் கட்டியம் கூறுவது போல்  அவரின் முகத்தில் புன்னகை ஒன்று தெளிவுடன் தோன்றி மறைகிறது......!”         
அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு அனைவரும் தமிழ் உணர்வைப் பெற்றவர்கள் போல் உத்வேகத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அந்த ஆண்டு பள்ளித் தவணைக்கான வகுப்புகள்  திறக்கப்படுவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன.பல ஆண்டுகளாக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டு பல சிரமங்களுக்கிடையில் பள்ளியை நடத்தும் தலைமையாசிரியருக்கு,இந்தஆண்டு மாணவர்களின் பதிவு எப்படி அமையப்போகிறதோ என்ற அச்சத்தில் மன இறுக்கமுடன் பள்ளி வாசலில் நின்று கொண்டிருக்கிறார்.
 மழைக்காக ஏங்கி நிற்கும்  பயிர்கள் போன்று அவரது நடவடிக்கைகள் தொய்வான நிலையில் இருந்தன. மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் கீழே குறைந்துவிட்டால் பள்ளியில் மேலுமொரு ஆசிரியர் வேலை இழக்க வேண்டி வருமே என்ற கவலை டிசம்பர் மாதத்திலேயே அவருக்குத் தொடங்கிவிட்டிருந்தது.  
 ஏற்கனவே மற்ற மொழிப்பள்ளிகளில் பதிவு செய்திருந்த  தமிழ்ப்பிள்ளைகள் நூறு பேர் சற்றும் எதிர்பாராத நிலையில் தம் பள்ளியில் சேர்ந்தபோது அந்த அதிசயத்தை அவரால் நம்பமுடியவில்லை! தாம் காண்பது கனவா? தம்மையே கேட்டுக் கொள்கிறார்.பல ஆண்டுகளாக தாம் கண்ட கனவை  பணி ஓய்வு பெறும் அந்த ஆண்டாவது நிறைவேறியதே....! இறைவனை நினைத்து கைகூப்புகிறார்.வானொலியில் ஒலியேறிக் கொண்டிருந்த இனிய பாடல் குடியிருப்புப் பகுதியிலிருந்து கேட்கிறது! 
                                              முடிவு
   




     




 








        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை