முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுச்சி


சிறுகதை:                                                                                                     
            எழுச்சி
                                வே.ம.அருச்சுணன்

“வெள்ளம் ஏறிடுச்சாம்.....! வெள்ளம் ஏறிடுச்சாம்......!”
“வெள்ளம்.......எங்க  ஏறிடுச்சு?  விவரமா........சொல்லு மணியம்....!”
“வேற எங்க ஜீவா ....! நம்ம...... தமிழ்ப்பள்ளியிலதான்.....வெள்ளம் ஏறிடுச்சாம்....!”
“ நேத்துப் பேஞ்ச செம மழைல.......வெள்ளம் ஏறாம இருக்குமா.....?”
          தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது!
          பள்ளியின் முன்னாள்  மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர்.
         இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை பிளாஸ்டிக்  வாளியில்  அள்ளி  வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி  ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர்.
         பள்ளிப் பணியாளர்கள்  மற்ற வகுப்புகளில்  ஏறிப்போயிருந்த நீரைச்  சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன  அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!
         எதிலும் முந்திக் கொள்ளும் மணியத்திற்கு தான் வருவதற்கு முன்பே தோட்ட மக்கள் பலர் அங்கு கூடிப்போயிருந்தது மனதில் வெட்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு மணியத்தின் முகம்  சுருங்கிவிட்டது! கூட்டத்தில் ஒருவனாக நெருங்கிய நண்பன்  சுந்தரம் இருந்தது மணியத்திற்கு  கோபமாக இருந்தது! அவன் விசியத்தைச் சொல்லியிருந்தால் முன்னாடியே வந்து உதவியிருக்கலாமே என்று மனம் வருந்துகிறார்!
      “சார்...! சார்....! நீங்கே வெளியே வாங்க. நாங்க  தண்ணீர இறைக்கிறோம் .......!”
மணியும், தலைமையாசிரியரிடமிருந்த வாளியை வாங்கி, ஓரடித் தண்ணீருக்குள் மூழ்கிப்போயிருந்த அவரது அலுவலகத்திலுள்ள தண்ணீரை மடமட வென்று இறைக்கிறார். ஜீவாவும் அவருடன் சேர்ந்து கொள்கிறான்.
      அங்கு வந்த பலரும் வேலையில் மும்முரம் காட்டுகின்றனர்.சிறிது நேரத்தில் தண்ணீர் வேகமாக அலுவலகத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. அரை மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்த  தண்ணீரை முற்றாக வெளியேற்றிய போது, தலைமையாசிரியரின் முகத்தில்  புன்னகை மலர் பூக்கிறது.
        “தலைவரே......அவசரத்திலே ஓடிவந்ததால உங்ககிட்ட சொல்லாம வந்துட்டேன்,மன்னிச்சிடுங்க.....!” சுந்தரம் பயத்தால் தயங்கி நின்றான்.
           “சரி...சரி....அதான் வந்துட்டோமில்ல....கவலைய விடு....! ஜீவா,சுந்தரம்.... நாம படிச்ச முதலாம் வகுப்பைப் போய்ப் பாப்போம்.....தண்ணீர் ஒரு அடிக்கு மேலே ஏறி நிக்குதாம்..!” வெள்ளத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த போதனைக்குரிய வாசிப்பு  அட்டைகள் பல தண்ணீரில் மிதந்தன. அவை மீண்டும் பயன் படுத்துவதற்கு  முற்றாய்த் தகுதியிழந்திருந்தன! ஆசிரியர்களின் உழைப்பு பாழாய்ப் போனது மணியத்திற்கு தாங்கொனா வருத்தத்தைத் தருகிறது! 
           நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் முதலாம் ஆண்டில் படிக்கும் போது தரையில் அமர்ந்து, மணல் பரப்பிய நீண்ட பலகையிலான பெட்டியில் எழுதிப் பழகிக் கொடுத்த அழகம்மா.....வாத்தியாரம்மா நினைவுக்கு வருகிறார். ஐம்பதாம் ஆண்டுகளில்,தரையில் அமர்ந்து பலரோடு தானும் கல்வி பயின்ற அந்த நினைவு மின்னல் கீற்றாப் பளிச்சன நினைக்கு வருக்கிறது
         வந்திருந்த, முன்னாள் மாணவர்கள்  எல்லா  வகுப்புகுகளிலும்  ஏறியிருந்தத் தண்ணீரை இறைக்கின்றனர். தண்ணீரில் மிதந்த கொண்டிருந்த நோட்டுப் புத்தகங்கள்,பயிற்சிப் புத்தகங்கள் இன்னும் சில பாட நூல்களை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தனர் சிலர்.
           மூன்று மணி நேரம் போராட்டத்திற்குப் பின் அலுவலகம்,வகுப்பறைகள் என்று பத்து அறைகளில் ஏறிய தண்ணீர் முற்றிலுமாக இறைக்கப்படுகிறது.
           எல்லா வகுப்பறைகளும் சேரும் சகதியுமாகக் காணப்படுகின்றன. வெள்ளத்தால் செத்து மடிந்த எலிகளும், பூச்சிகளும், துர்நாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
          எத்தனையும் பொருட்படுத்தாமல்,சேற்றையும் சகதியையும் வாளிகளிலும் மற்ற பாத்திரங்களிலும்,அள்ளி  வெளியில்  கொட்டிக்  கொண்டிருந்தனர். அங்கிருருந்த முன்னாள் மாணவர்கள். நாளை மாணவர்கள் கல்வி கற்க வேண்டுமே என்ற அக்கறையினால், உடல் உழைப்பை  முழுமையாகக்  கொடுத்து உழைத்துக் கொண்டிருத்தனர். பொது அமைப்பைச் சேர்ந்த பலரின் உழைப்பும் அக்கறையும் அங்கு மிகுந்து காணப்படுகின்றன!
             கடும் உழைப்பை வழங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்க தலைமையாசிரியர் ஏற்பாடு   செய்திருந்தார். அவர்,பணியில் ஈடுபட்டிருந்த அனைவருடனும் ஒன்றாய் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். 
  “டத்தோ.....வந்துட்டாரு, டத்தோ வந்துட்டாரு.....!” மணியத்தின் அருகில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த ஜீவாதான் எல்லாரது கவனமும் ஈர்க்கும் வகையில் உரத்தக் குரலில் கூறுகிறான். டத்தோவை நோக்கி எல்லாரது கவனமும் திரும்புகிறது.
               உணவை உண்டு  முடித்தவர்கள் தலைமையாசிரியருடன் அவசர அவசரமாக  டத்தோ  மனோகரனை எதிர் கொண்டு வரவேற்கின்றனர். மணியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்; இன்னும் அவர் உணவை உண்டு முடிக்கவில்லை!
              டத்தோ மனோகரனும் மணியமும் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.தங்கள் பள்ளியில் பயின்ற தம் நெருங்கிய நண்பர்  சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு மிகக் கடுமையாக உழைத்தவர் மணியம். கடந்த இருபது வருடங்களாகச் சட்டமன்ற உறுப்பினராகவும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.        
              முதல் முறையாக, அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற போது இப்போது கொண்டிருக்கும் டத்தோ பட்டத்தையோ, பிற பதவிகளையோ கொண்டிருக்கவில்லை. பதவிக்கு வந்த ஐந்தாண்டுகளில் மளமள வென்று டத்தோ பட்டமின்றி பல பதவிகளையும் பட்டங்களையும் பெற்று அரசியல் வானில் மின்னும் நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கிறார்.
             முன்னாள் மாணவர் சங்கம்’, அவரைச் சிறப்புடன்   பள்ளிக்கு  அழைத்து      தலைவர் என்ற முறையிலும் நெருங்கி நண்பர் என்ற முறையிலும், மணியம் சில கோரிக்கைகளை அவர் முன்  வைக்கிறார்.
               மிக முக்கியமான கோரிக்கையாக,எண்பது ஆண்டுகாலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிப் பிரச்னை! இதுவரை பல்வேறு காரணங்களுக்காக நான்கு முறை  பள்ளிக் கட்டிடம் இடம் பெயர்ந்துள்ளது. தாழ்வு நிலங்களில் பள்ளி அமைக்கப் பட்டதன் விளைவே அடிக்கடி வெள்ளப் பிரச்னையில் பள்ளி சிக்கிப் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளது.
              இதற்கு நிரந்திரத் தீர்வாகப், புதியப் பள்ளியை மேட்டு நிலத்தில்   அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கிறார் மணியம். மறுமொழி பகன்ற, ஓய்பீ மனோகரன், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், பள்ளியை மேட்டு நிலத்தில், கட்டி வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக உறுதி கூறியபோது நிகழ்வு நடந்த மண்டபத்தின் கூரையே இடிந்துவிடும் அளவிற்கு கையொலி ஓங்கி ஒலித்தது! மாலையும் மரியாதையும் பெற்றுக் கொண்டு போகிறார்.
               அன்று,கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன் பல அரசியல்வாதிகளைப் பார்த்தவர்களுக்கு,ஓய்பியின் சாதுர்யமானப் பேச்சு அனைவரையும் தலைகீழாய்ப் பிரட்டிப் போட்டிருந்தது! எங்க வீட்டுப் பிள்ளை நிச்சயம் புதிய பள்ளியைக் கட்டிக் கொடுத்துவிடுவார் என்று பந்தயம் கட்டினர்!     
மறுநாள்!
“ஹல்லோ.....யாரு பேசுறது...?”
“ஓய்பீ.மனோகரன் போசுறேன்....!”
“என்ன....! ஓய்பீயா பேசுறது......?” ஆச்சரியப் படுகிறார் மணியம்.
“பள்ளி விசியமா ஏதும் பேசனுமா ஓய்பீ.....? சொல்லுங்க செயலவை உறுப்பினர்களை அழைச்சிக்கிட்டு நேரில் வர்றேன்....!”
“அதெல்லாம்..... ஒன்னும் வேணாம்....! நாளை புதன் கிழமை காலை மணி பத்துக்கு என்னோட ஆபீசுக்கு வந்துடு..... சில முக்கியமான விசியங்களை உன்னோடு பேசனும்...!”
          மறுநாள், காலை ஒன்பது மணிக்கே ஓய்பியின் அலுவலகம் அமைந்த பதினான்காவது மாடிக்குச் செல்கிறார் மணியம். அலுவலகத்தில் திருவிழாக் கோலம் போல் மக்கள் வெள்ளம் காணப்படுகிறது! மணியத்திற்கு அங்கே முன்னே பின்னே சென்றது கிடையாது! அரசியல்வாதியாக இல்லாததே இது போன்ற இடங்களுக்குச் செல்லாததே காரணமாகும்!  அங்கு குழுமியிருந்தவர்கள் பெரும்பாலும் அரசியல் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர்!
            குறித்த நேரத்தில், செயலாளர் வந்து மணியத்தை ஓய்பீ அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பால்ய நண்பர் என்ற தகுதியை மட்டுமே கொண்டிருந்த மணியத்திற்கு  ஓய்பியின் உடனடித் தரிசனம் வியப்பையும்,நண்பர் என்ற நட்புக்கு வழங்கிய  மதிப்பையும், மரியாதையும் மணியத்தின் உள்ளத்தில் ஓய்பியின் மதிப்பு இமையத்தை தாண்டிக் கொண்டிருந்தது!  
“மணியம்.....எப்படி இருக்கே....?”
“நலமா  இருக்கேன்.....! எனக்கு என்ன குறைச்ச ஓய்பீ....?”
“இருக்கிறது சொந்த வீடா....?”
“ஆமாம்.... சொந்தவீடுதான் ஓய்பீ.....!”
“எத்தனை வீடு வெச்சிருக்கே.....?”
“ஒரு வீடுதான்....!”
“எத்தனைப் புள்ளைங்க இருக்காங்க...?”
“நான்குப் பிள்ளைங்க இருக்காங்க....!”
“பிளைகள்......எல்லாம் வேலை செய்யுறாங்களா...?”      
“மூன்று பேர் வேலை செய்றாங்க.....கடைசிப் பையன் எம்யூல கடைசி ஆண்டு இஞ்ஜியரிங் செய்யிறாரு....!”
“உனக்கு....வருமானம்.....போதுமானதா இருக்கா...?”
“இருபது ஆண்டுகளாக நானும் மனைவியும் செய்யிற பூவிற்பனை மூலம் போதுமான வருமானம் கிடைக்குது. திட்டமிட்டு வாழ்றதால ஆண்டவன் புண்ணியத்தில நிம்மதியா வாந்துகிட்டு இருக்கோம். அது போதும்.....ஓய்பீ....!”
“மணியம்.....என்னப்பா நீ  பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிறீயே.....!”
“ஓய்பீ.....நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு விளங்கல....!”
“நான்....ஒரு அரசியல்வாதி, காற்று இருக்கும் போது தூற்றிக் கொள்ளனு முனு பழமொழி சொல்லுது....! உனக்கு நிலம் போட்டுத்தர்ரேன். பட்டம் போடுரேன்.வீடு போட்டுத் தர்ரேன். பணம் தர்ரேன்.....! எது வேணும் சொல்லு....? உடனே தர்ரேன். நாம ஒரே வகுப்பில படிச்சோம் என்ற உறவினால உனக்காக எதுவும் செய்யிறதுக்குத் தயாராஇருக்கேன்! கொடுக்கிறத வாங்கிகிட்டு சும்மா இருப்பியா......!இதவுட்டுட்டு..... பள்ளியப் புதுசாக் கட்டனுமுனு....பப்ளிக்கா கூட்டத்தில பேசிக்கிட்டுத் திரியாதே.....!”
“என்ன......ஓய்பீ......இப்படிப் பேசுறீங்க.......?”
“மணியம்......நீ ஒன்ன நல்லா புரிஞ்சிக்கனும். என் அரசியல் வாழ்வுக்கு குறுக்கே வர்ர யாரையும் நான் விட்டு வைக்கிறதில்லை.....! என் வழியிலக் குறுக்கிட்ட நண்பன் என்றுகூடப் பார்க்க மாட்டேன்!”
          ஓய்பியின் பேச்சைக் கேட்டு மணியம் அதர்ச்சியடைகிறார் ஒரு கணம்.
“ஐஞ்சி வருசத்தில......நாம படிச்சப் பள்ளியக் கட்டித்தர்ரதா.....பெற்றோர் முன்னிலையில் வாக்கு கொடுத்திங்களே......ஓய்பீ!” 
“மணியம்.....என்னைப் போன்ற அரசியல்வாதிங்க.....சூழ்நிலைக்குத் தகுந்தாப் போல பேசுவோம்.....! நாங்கப் பேசுறதயெல்லாம் உண்மையினு பொதுமக்கள் நினைச்சிக்கிட்டா அதுக்கு நாங்கப் பொறுப்பில்லையே....?” மணியத்தைப் பார்த்து ஏளனமுடன் கடகடவென....சிரிக்கிறார். அகம்பாவம் அவரது குரலில் தலைவிரித்து ஆடுகிறது....!
         அவமானத்தால், மணியம் தலைகுனிகிறார்! ஏன் வந்தோமுனு ஆயிடுச்சு! இனியும் அங்கிருக்கத் தன்மானம் அவருக்கு இடம் தராததால்,உடனே அங்கிருந்து வெளியேறுகிறார்!
          பொதுவாழ்வில்  சோரம் போகாத ஒரு சொக்கத் தங்கம் வெளியில் செல்வதை முதல் முறையாக வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார் ஓய்பீ!  மணியம்,  தன் பால்ய நண்பன் என்று கூறுவதில் மனதளவில் பெருமைப் பட்டுக் கொள்கிறார்!
         கபடம் நிறைந்த மற்ற அரசியல்வாதிகள் போல் அல்லவா,தன் ஆருயிர் நண்பனும் நடந்து கொண்டான்! ச்சே.....என்ன உலகமடா இது.! தன்னுடன் படித்தவனே.....ஏங்கித்தவிக்கும் இந்த ஏழைச் சமுதாயத்தைத்…… தன் சுயநலப் போக்கால்  கைதூக்கிவிட முன்வரவிலையே....?  
          நாடு சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு கடந்துவிட்டது.நாடு துரித வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. எல்லா இனமும் வாழ்வில் உயர்ந்துவிட்டன!  நமது வாழ்வில் மட்டும் எந்தவிதப் பெரியமாற்றமும் ஏற்படாமல் போய்விட்டதே? நல்ல சூழலில் கல்வி கற்க ஒரு பள்ளியைக் கட்டமுடியவில்லையே? இனி....யார்தான் நமக்கு உதவப் போகிறார்கள்?  மிகுந்த மனக் கவலையுடன் வீடு திரும்புகிறார் மணியம்.
         விசியத்தை ஜீவா அறிந்த போது வெகுண்டெழுந்தான், “தலைவரே......நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க....மிக விரைவில ஏதோ... சுனாமி வரப்போர்ரதா பேப்பர்ல போட்டுருக்காங்க! ம்.....வீசிக்கிட்டிருக்கிற காற்று எப்போதும் ஒரே திசையில வீசப்போறதில்லா.....!”
         மலேசியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு புதிய பள்ளியைக் கட்டும் திட்டத்தை 2007 ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கின்றார்.சற்றும் எதிர்பார்க்காத அமோக ஆதரவு கிடைக்கிறது! ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் உரிமைக்காகப் போராட உறுதி கொள்கின்றனர். இதுவரையில் ஏமாந்தது போதுமென்ற முடிவு எடுக்கின்றனர்.மக்கள் விழித்துக் கொள்கின்றனர்!
          ஐந்து ஆண்டுகளாக மிகக்கடுமையாக உழைக்கிறார் மணியம்.    

         தான்   இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது  என்ற இறுமாப்புடன் உலாவந்த டத்தோ,அவரது நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறது!
          நாட்டில் அதிநவீன முறையில் கட்டப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியின் திறப்புவிழாக் காட்சியைப் பதவி இழந்த டத்தோ மனோகரன்  தொலைக்காட்சியில் கண்டு வெட்கித் தலைகுனிகிறார்! 


                                          முற்றியது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை