முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊடக வன்முறை


                          ஊடக வன்முறை            
          மலேசியத் தமிழ் ஊடகங்களின் மக்கள் விரோதப் போக்கு

 
நூலாசிரியர்:
இந்நாட்டு ஒட்டு மொத்த தமிழர்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் தோட்டப்புறம், அங்கு வாழ்ந்து மடிந்த நமது முன்னோர்கள்,இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது உடன் பிறப்புகளைப் பற்றிய சோக வரலாற்றை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் நூலாசிரியர் சகோதரர் மு.வரதராசு அவர்கள் எழுதிய நூல்கள் நமக்கு நினைவுக்கு வரும். தோட்டப்பாட்டாளிகள் எதிர் கொண்ட பல்வேறு பிரச்னைகளைக்  கள ஆய்வு செய்து   வெளியிட்ட அவரது நூல்கள்  இந்நாட்டு இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களின் இக்கட்டானச் சூழல்களை நமக்குப் படம் போட்டுக் காட்டியுள்ளன.
       தோட்டத்தில் பிறந்து வளர்ந்து நூலாசிரியர்,குடும்பச் சூழலால் இளம்வயதிலேயே தோட்டத்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி  பல்வேறு துக்கங்களையும் துயரங்களையும் அனுபவித்த நூலாசிரியர் தன்பட்டறிவை  நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வகையில், மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி,சமூகப் பொருளாதார நிலைகள் குறித்து இதுவரையில் விரிவான ஐந்து நூல்கள் எழுதியுள்ளார்.
(1)        1988- மலேசியத் தோட்டத் தொழிலாளர் வரலாரும்              
          பிரச்சனைகளும்.
(2)        1993-எங்கே என் பங்கு? மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் தொடரும் பிரச்சனைகள்.
(3)        2004- எரிந்துகொண்டிருக்கும் தமிழினம்.
(4)        2008- வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ்க்கல்வி போராடும் மக்கள்.
(5)        2013- ஊடக வன்முறை மலேசியத் தமிழ் ஊடகங்களின் மக்கள் விரோதப் போக்கு.


      ஊடக வன்முறை மலேசியத் தமிழ் ஊடகங்களின் மக்கள் விரோதப் போக்கு எனும் 56 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல் என்றாலும், நாட்டின் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக எழுதப்பட்ட நூல் என்றால் அது மிகையில்லை.மேலும்,அவசரமும் அவசியமும் கருதி முக்கியச் செய்திகள் மக்களிடையே விரைவாகச் சென்று அடைய வேண்டும் என்ற நோக்கில்,இரத்தினச் சுருக்கமாகத் தனது கருத்துகளைச்  சிறிய நூல்கள் வழி வெளியிடும் நூலாசிரியரின் சிந்தனைப் பாராட்டுக்குரியது.இந்நூலாசிரியரைப் பின்பற்றி,சமூக மேம்பாட்டுக்காக உழைக்கின்ற எழுத்தாளர்களும் தங்களின் சிந்தனைகளை சிறிய நூல்கள் மூலமாக வெளியிடுவது வரவேற்கத்தக்கதாகும்.
ஊடக  வன்முறை என்றால் என்ன?
வானொலி,தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள்  போன்ற தகவல் சாதனங்கள் மக்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் நாட்டு நடப்புகளை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வெளியிடும் ஊடகங்களாகும்.அவ்வாறு,மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடப்பதும் பத்திரிக்கை தர்மமாகும்.அதுவே அவர்களின் தலையாய கடமையுமாகும்.
     ஊடகங்கள் தங்களின் சுய இலாபம் கருதி  தங்களது வியாபாரம் எந்த விதத்திலும் இழப்பை எதிர்கொள்ளாமல், பார்த்துக் கொள்வதுடன்,ஆள் பார்த்து, பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டு, செய்திகளை 'இருட்டடிப்பு' செய்து  தவறான செய்திகளை மக்களுக்குத் தருவதன் மூலம், மக்களிடையே பகை உணர்ச்சியையும்  குழப்பத்தை ஏற்படுத்திச் சமுதாயச் சீரழிவுக்கு வித்திடுவதை  ஊடக வன்முறை என்று கருதப்படுகிறது.
 இந்நூல் எழுத காரணம் என்ன?
எழுத்தாளரும்,கவிஞரும்,ஆய்வாளரும்,இடைநிலைப்பள்ளி ஆசிரியருமான திரு.சீ.அருணாசலம் அவர்களின் இரு நூல்களான தமிழர் தடங்கள்மற்றும் ஆலின் வேர்நூல் வெளியீட்டு விழாவில் கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணைஅமைச்சர் டத்தோ சரவணன் அவர்கள் ஆற்றிய தலைமையுரையில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன  என்று தெரிந்தும்  வரலாற்றுப் பிழையுடன் மலேசிய நண்பன்மற்றும் மக்கள் ஓசைஆகிய இரு நாளேடுகளும் பெரிய அளவில்  அச்செய்திகளை விரிவாக வெளியிட்டிருந்தன.அந்தப் பிழையச் சுட்டி, நூலாசிரியர் மறுப்பறிக்கையை ஒன்றைத் தயாரித்து அந்த நாளிதழ்களின் ஆசிரியர்களிடம் நேரில் கொடுத்தும் அவர்கள் அதனைத் தங்களது நாளிதழ்களில் பிரசுரிக்கவில்லை.
      நூலாசிரியரின் மறுப்பறிக்கை தங்களின் பத்திரிக்கையில் பிரசுரித்து துணையமைச்சரின் கோபத்திற்கு ஆளாக வேண்டாமே என்ற சுயநலப்போக்கை, கண்டித்து எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்;மெய்ப்பொருள் காண்ப தறிவு எனும் வள்ளுவரின் கூற்றுக்கேற்ப, மக்கள் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்,தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நூலாசிரியர் இந்நூலை எழுதக் காரணமாக அமைந்துவிட்டது.
    180 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாட்டிற்கு,ஆங்கிலேயர்களால் குடியேற்றப்பட்ட,இந்தியர்கள்,குறிப்பாக தமிழர்கள் காடாக இருந்த இந்நாட்டை மேம்படுத்த இரப்பர் தோட்டங்களில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி இரத்த வியர்வையைச் சிந்தினார்கள். கொசுக் கடிகளுக்கும்,கொடிய பாம்புகளுக்கும்,விலங்குகளுக்கும் பல்லாயிரம் பேர் இரையாகிப்போனோர் எனும் வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாது. இதைவிடக் கொடுமை சயாம் மரண இரயில் தண்டவாளம் அமைப்பதில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் உயிரைக் இழந்திருக்கின்றனர்.
    மேலும் மலேசியாவில் போடப்பட்ட இரயில் தண்டவாளம் போடும்பணியில் இறந்தோர் பல ஆயிரங்களைத் தாண்டும்.இன்று இருக்கும் அதிநவீன கனரக இயந்திரங்கள் இல்லாத சூழலில் அமைக்கப்பட தண்டவாளம் எத்தனை உயிர்களைக் காவு கொண்டிருக்கும்? தண்டவாளத்திற்குக் கீழே தோண்டிப்பார்த்தால் எத்தனை ஆயிரம் தமிழர்களின் மண்டை ஓடுகள் இருக்கும்?
     சயாமுக்கும் பர்மாவுக்கும்  ரயில் தண்டவாளம் போடுவதற்கு இலட்சக்கணக்கில் ஜப்பானியர்கள்,தமிழர்களைக் காவு கொடுத்தது மட்டுமல்லாமல், உழைத்த தமிழர்களின் தடயங்களையும், இறந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டி ஜப்பான் நாட்டிடம் நஸ்டஈட்டைப் பெறமுடியாதவாறு  திட்டமிட்டே அழித்திருக்கின்றனர்.மேலும்,ஜப்பான் அரசு சயாம் மரண இரயில்கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு  வழங்கிய நஸ்டஈட்டுத் தொகையையும் மலேசிய அனைத்துலக கப்பல் வாரியத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக அரசு தமிழர்களை ஏமாற்றிவிட்டது. 
    சயாம்-பர்மா இரயில்பாதை கட்டுமானப்பணியில்போது,அங்கிருந்த ஜப்பானிய உயர் அதிகாரிகளுக்கு காம இன்பம் கொடுப்பதற்காக தைவான்,தென்கொரிய,பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள்,பின்னாளில் ஊடகங்களின் துணையுடன்,ஜப்பான் நாட்டிடம்நஸ்டஈடு பெற்றதுடன்,அந்நாட்டுப் பிரதமர் மன்னிப்பு கேட்கவும் செய்தனர்.ஆனால், தமிழர்களின் நிலை இன்றும் கிள்ளுக்கீரையாகக் கேவலப்படும் நிலையில் இருப்பது வருத்தத்துக்குரியதாகும்.
    இந்நிலையில்,தலைநகரில் போடப்பட்ட இலகு ரயில் தண்டவாளத்தின் கீழ் தோண்டிப்பார்த்தால் இந்தோனசியர்களின் மண்டை ஓடுகள்தான் இருக்கும் என்றுஅங்கலாய்க்கும் துணையமைச்சர்.சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தோனேசியர்கள் இங்கு வந்தவர்கள். இதுநாள்வரையில் இந்தியர்கள் இந்நாட்டிற்குச் செய்த தியாகங்களைக் குறைத்து மதிப்பீடு செய்யும் ஆணவப் போக்காகும்.அது வரலாற்றுப் பிழையானது;கண்டிக்கத் தக்கதுமாகும்.     
     இன்றைய தமிழ் தினசரிகள்,ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த வாசகர்களை நோக்கியே விசியங்களைத் தருவதில் தமிழ் நாட்டைப் பின் பற்றுகின்றனர்.சுமார் இருபது இலட்சம் தமிழர்களின் ஜனத்தொகையில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர்தான் தமிழ்த்தினசரிகளை வாசிக்கின்றனர்.ஆங்கில்,மலாய்ப் பத்திரிக்கைப்போல், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற விசியங்கள் இல்லாததால் இளையோர்,தமிழ் தினசரிகளை வாசிப்பதில் நாட்டம் கொள்வதில்லை.இந்நிலை மேலும் தொடருமானால்  தமிழைப் படிப்போர் எதிர்காலத்தில் இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். தமிழை வளர்க்கிறோம்  என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழ் தினசரிகள் அரங்கேற்றும் சித்து விளையாட்டாகும்.
     ஆங்கில,மலாய் தினசரிகளில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் கூட,இந்நாட்டு தமிழர்களைப் பற்றியோ, இளைஞர்கள் பற்றியோ சிறப்பாக எழுதுவதில்லை.தமிழர்களின் மேம்பாடான வாழ்வுக்கு பங்கற்ற முன்வருவதில்லை.ஆனால்,இந்தியர்களின்,கோட்டா முறையில் பெற வேண்டிய அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதில்,ஏமாந்த தமிழர்களையெல்லாம் பின்னே தள்ளிவிட்டு,வேங்கையாய் முன்னே பாய்ந்து செல்கின்றனர்.
     கருமக்கிரிகைப் பத்திரிக்கைகளாக இன்று உலாவரும்     தமிழ்ப் பத்திரிக்கைகள்,நாட்டில் சாதியை உரம் போட்டு வளர்ப்பதோடு நில்லாமல்,நிரந்திரமாக தமிழர்கள் இந்நாட்டில் வேற்றுமைகளோடு பிரிந்து வாழ பணம் படைத்தவர்களின் கைப்பாவையாகிப் போய்க் கொண்டிருப்பது தமிழர்களுக்கிடப்பட்ட சாபம் போலும்!  
     கத்தி முனையைவிட,பேனா முனை வலிமையானது என்பதை நன்கு உணர்ந்திருந்தும், கடந்த 56 ஆண்டுகளாக, அரசாங்கம் திட்டமிட்டே தோட்டத்தில் வாழ்ந்த தமிழர்களைத் தோட்டத்தைவிட்டு வெளியேற்றி,அவர்களை நடுத்தெருவிற்குக் கொண்டு வந்த,சொந்த நாட்டிலேயே தமிழர்களை நாடற்றவர்களாக்கிய அரசையும்,தோட்டத் தொழிலாளர்களுக்காகப் தொழிற்சங்கம் மௌனம் காத்ததையும் தட்டிக் கேட்காமல், அரசுக்கு ஆதரவு கரங்களை நீட்டிய தமிழ் தினசரிகள் இன்று தமிழர்கள் ஏழைகளாகவும்,நமது இளைஞர்கள் முறையான கல்வி அறிவைப் பெறாமல்,அடிதடிகளில் ஈடுபடும் குண்டர்களாகவும்,கொலைக்காரர்களாகவும் காவல்துறைத்தேடும் பயங்கரவாதிகளாகவும்,சந்தேக நபர்களாகக் காவல் துறையிடம் பிடிபட்டு,லாக்காப்பில் ஈவிரக்கமின்றி விசாரணை என்ற பெயரில் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்படும் பரிதாப நிலைக்குச் சென்றுவிட்ட தமிழர்களின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்குத் தார்மீகப் பொறுப்பை இன்றைய ஊடகங்கள் ஏற்க வேண்டும்.
      நூலாசிரியரின் பல்வேறு கருத்துகளைத் தாங்கி வந்துள்ள, ஊடக வன்முறை நூலை அனைவரும் வாசித்து பயன் பெற உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதுடன்,நூலாசிரியர் சகோதரர் மு.வரதராசு அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறேன்.நன்றி.வணக்கம், வாழ்க!
.வே.ம.அருச்சுணன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை