முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிர்ஷ்ட தேவன்



சிறுகதை:               அதிர்ஷ்ட தேவன்          14.11.2012  
                    வே.ம. அருச்சுணன் – மலேசியா 

“குடியிருந்த வீட்டையே! ச்சே.....நீயெல்லாம் ஒரு மனுசனா.?”
இல்ல வேந்தன்.....!”
“என்ன இல்ல?” வேந்தன் கடுப்பாகிப் போகிறான்.
“...............”
“செய்யிறதையும் செஞ்சுப்புட்டு.இப்ப நல்லவனா நடிக்கலாமா?”
“சுயநினைவிலையா செஞ்சேன்.....!”
“முகிலன்.......நீ செய்தது மன்னிக்க முடியாதக் குற்றம்...!”
“அன்றைக்குக் கொஞ்சம் தண்ணீ  ஓவராப் போயிடுச்சு....!”
“ நெருப்பு வெச்சது நீ குடியிருந்த  வீட்ட....!”
“...................!”
“தொட்டுத் தாலிக்கட்டிய மனைவி.........என்னதான் தப்புச் செஞ்சிருந்தாலும்........!”
“அதற்குப் போயா மனுசன் குடியிருக்கிற வீட்டைக் கொளுத்துவாங்களா....?”
         ஆறு மாதச் சிறைவாசத்திற்குப் பின்,  பார்க்கச் சென்ற முகிலனை வறுத்தெடுத்தான் வேந்தன்! அவனது கடுஞ்சொற்களால்  முகிலன் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.
         முகிலன் தன் மனைவி சுசிலாவைக் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டான்.அன்னியோன்னியமாகவே இருவரும் வாழ்கின்றனர்.மனைவி அரசு ஊழியர்; பட்டதாரி. பொறுப்பானப் பதவியில் இருக்கிறார். முகிலன் தனியார் நிறுவனத்தில் வேலை.           அதிகமாகச் சம்பாதித்தாலும் சுசிலா எந்தவிதப் பந்தாவும் இல்லாமல் கணவனோடு   வசந்தத்தின் உச்சத்தில் இருக்கிறாள். குடும்ப வருமானத்தை இருவருமே இணைந்து வழிநடத்துகின்றனர்.            
           “முகிலன்.....நீ புதுசா சில நண்பர்களோடு சேர்ந்துகிட்டுத்  தவறான நடவடிக்கையில ஈடுபடுறதாக் கேள்விப்பட்டேன் அதுவெல்லாம் உண்மையா....?”
           “என் மேல போராமைப் பட்டு   யாரோ சொல்றக் கதைய நீ நம்பவேண்டாம் வேந்தன்!”
          “இப்பெல்லாம்....வீட்டுக்குத் திரும்பும் போது நல்லாக் குடிச்சிட்டு லேட்டாதான் தொரை வீட்டுக்குப் போற்றதாத் தகவல். ஞாயத்தக் கேட்டா மனைவியிடம் வீணாத் தகராறு. மீறிக்கேட்டா மனைவி மீதே கை வைக்கிறது......! இதுவென்னப் புதுப்பழக்கம்?  நல்ல குடும்பத்துக்கு இதுவெல்லாம் ஆகாது!” வேந்தன் ஆறு மாதங்களுக்கு முன்பே முகிலனை எச்சரித்திருந்தான்.
       யார் கண்பட்டதோ.....! கூடாதச் சகவாசத்தால் முகிலன் பெரும் குடிகாரனாகிவிடுகிறான். சுசிலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பொறுப்புள்ளக் கணவனாக அவன் நடக்காததால் பணவிசியத்தை மனைவியே கவனிக்க வேண்டியதாயிற்று. தன் பேங் கார்டு, முகிலனின் பேங் கார்டு ஆகிய இரண்டு கார்டுகளையும் சுசிலாவே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.
       கஸ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தை, உடலையும் உள்ளத்தையும் கெடுக்கும்  குடியில் உழன்று, நண்பர்களுடன்  ஊதாரித்தனமாகப் பணத்தைச்  செலவிடுவதை மனைவி  விரும்பவில்லை!  இதுவே, கணவன் மனவியிடம் பெரும் பிளவை ஏற்படுத்தியது! தன் விருப்பத்திற்கு இடையூறாக இருக்கும்  மனைவிடம் சதா சண்டையிலும் சச்சரவிலும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறான் முகிலன். மனைவி மிகவும் தைரியசாலியாகவும் விவேகமாகவும் இருந்ததால் கணவனைச்  சுலபமாகச் சமாளிக்கிறாள்.
       உறவினர்கள் பக்கபலமாக இருந்ததால்    முகிலனால் மனைவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. குடித்துவிட்டு ஒருநாள் வீட்டில் பெரும் கலாட்டா செய்து வீட்டின் அமைதியைத் தரைமட்டமாக்கிவிட்டான்.அதோடு, தம் இரு குழந்தைகளும் பெரும் மன உளைச்சலுக்குள்ளானதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுசிலா காவல் துறையிடம் புகார் கொடுக்கிறாள். காவல் துறையினர் முகிலனைக் கைது செய்து லாக்காப்பில் ஒரு வாரம் அடைத்தனர்!   
        சிறைவாசத்திற்குப் பிறகு கணவன் வீட்டிற்கு வருவதை சுசிலா தடுத்துவிட்டாள். தம்மை அவமனப்படுத்தியக் கணவனை மன்னிக்க அவள் தயாராக இல்லை.அவளைப் பொறுத்தமட்டில் குடி குடியைக் கெடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. சுயபுத்தி இல்லாத மனிதரிடம் வாழ்க்கை நடத்துவதுச் சுலபமானக் காரியமில்லை என்பதை தொலை நோக்காய்ச் சிந்தித்தவள்.
        சிறைவாசம் முகிலனிடத்தில் யாதொரு மனமாற்றத்தையும் கொண்டுவரவில்லை! மீண்டும் நண்பர்களின் சேர்கை. அளவற்ற குடிப்பழக்கம். ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை. இவனது நடவடிக்கையில் அதிருப்தியடைந்த  வேலை செய்த நிறுவனம் அவனை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறது.
        கையிலிருந்த பணத்தையெல்லாம் குடிக்காகச் செலவிடுகிறான். நண்பர்கள் புதிது புதிதாகச் சேர்கின்றனர். நிலைமை மேலும் மோசமடைகிறது.தனித்துவிடப்படுகிறான். தான் என்ன செய்கிறோம் என்று சிறிதும் எண்ணிப்பார்க்காத நிலையில்தான், ஒருநாள் இரவு குடிபோதையில்  மனைவியின் லோனில் வாங்கிய வீட்டைத் தீ வைக்கிறான்.
       நல்ல வேளை,சுசிலாவுக்கோ குழந்தைகளுக்கோ ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. அக்கம் பக்கத்திலுள்ளோர் சரியான நேரத்தில் அவர்களைக் காப்பாற்றுகின்றனர். எனினும் வீடு பெருமளவில் சேதமுற்றது!
       “சுசி....நீ எதற்கும் கவலைப்படாதே. நான் இருக்கும் வரைக்கும் உனக்கு எந்தக் கவலையும் வேண்டாம். உனக்கு வேண்டிய உதவிகளை நான் செய்றேன்” உயிர்த் தோழி மங்கையின் ஆறுதல் மொழிகள் சுசிக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது.  தம் இரு குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய ஆளாக்க மனதில் உறுதி பூண்டாள்.
           தனக்கு ஏற்பட்டக் கசப்பான அனுபவங்களை ஒரு கறுப்பு அத்தியாமாக எண்ணி அவள் மறக்கலானாள். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட விரைவிலேயே கற்றுக் கொண்டாள்.    
          பழைய நினைவுகளிலிருந்து விடுபட புதுகுடியிருப்புக்கு இடமாறினாள் சுசிலா. இடமாற்றம் அவள் எண்ணியவாறு ஓரளவு மனநிம்மதியையும் கொடுத்தது. குழந்தைகள் இருவரையும் கண்ணும் கருத்துடனும் வளர்க்கிறாள்.அப்பா இல்லாதக் குறைத் தெரியாமல் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகின்றனர். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று இருவரும் அரசாங்கப் பணிகளில் சேர்கின்றனர்;  கைநிறையச் சம்பாதிக்கத் தொடங்குகின்றனர்.
         வேலையில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே தம் இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறாள் சுசிலா. பிள்ளைகள் விரும்பியபடியே அவர்கள் வாழ்க்கைத்துணைகளைத் தேடிக்கொள்கின்றனர்.அவர்களின் விருப்பப்படியே வாழவும் வழிவகுத்துக் கொடுக்கிறாள்.
          திருமணத்திற்குப் பின் பிள்ளைகள் இருவரும்,தங்களின் குடும்பங்களைக் கவனித்துக் கொள்ள சுசிலாவைத் தனியாக விட்டுவிட்டுச் செல்கின்றனர்.சுசிலாவும் ஐம்பத்தைந்து வயதைக் கடந்த பின்பும் அறுபது வயது வரையிலும் வேலை செய்ய அரசாங்கம் வழிவகுத்துக் கொடுத்ததும் ஒருவகையில் தன் தனிமையைப் போக்க வடிகாலாய் அமைந்தது நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணுகிறாள்.
           கட்டிய கணவனும் பிள்ளைகளும் உயிருடன் இருந்தும்,ஏதோ ஒரு கண்காணாதத் தேசத்தில் தான் மட்டும் ஒரு பாவப்பட்ட ஜென்மமாகத் தனிமையில் வாடிநிற்பது,முற்பிறவியில் தாம் செய்த தீவினையின் காரணமாக இருக்கலாமோ என்று எண்ணி வருந்துகிறாள் சுசிலா!  
           பிள்ளைகள் இருவரும் பொது விடுமுறைக் காலங்களில் மட்டும் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். அதிர்ஸ்டவசமாக அவர்களின் குடும்பங்களில், தம்மைப்  பார்த்துவிட்டுப் போவதில் பிள்ளைகளுக்கு எந்தவிதப் பிரச்னையும் எழவில்லை. பிள்ளைகள் இருவரும் சிறப்பாகக் குடும்பம் நடத்துவது கண்டு மகிழ்ந்து போகிறாள்.   
            தனித்து வாழ்வதில் எவ்வளவு சிரமம் உள்ளதைச் சுசிலா உணர்ந்து வெகு நாளாகிப் போனது! கணவன் இருந்தும் வாழமுடியாதத் துர்பாக்கிய நிலையை எண்ணி பல வேளைகளில் கண் கலங்குவாள். பெற்ற குழந்தைகள் இருவரும் தங்களின் குடும்பத்தை நடத்தப் போய்விட்டார்கள்.அவர்களை எதிர்பார்த்து வாழ்வது முறையல்ல என்பதை சுசிலா உணராமல் இல்லை.வயதானக் காலத்தில் தனக்கு ஆதரவாக யாராவது இருப்பார்களா.....என்ற எண்ணம் அவளையும் அறியாமல் மனத்திரையில் தோன்றி மறைகிறது!
            மங்கை மட்டும் இல்லாமல் இருந்தால் சுசிலா மனமொடிந்து போயிருப்பாள்.தம் வாழ்க்கை அர்தமற்றதாய்ப் போயிருக்கும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் போனில் அழைத்து முகமன் பரிமாறிக் கொள்வாள்.
“மங்கை....நலமா?”
“சுசி....உன்னிடம் பேசாமல் ஒரு நாளையும் கடத்திடமுடியவில்லை...”
“எனக்கு மட்டும் என்னவாம்.....? என் மன உணர்வுகளை உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்....!”
“உண்மைதான்....சுசி! அது சரி.....ஏதோ உடம்புக்கு முடியலனு காலையில கிளினிக்குப் போனியே டாக்டர் என்ன சொன்னார்?”
“பயப்படும்படியா...ஒன்னுமில்லன்னு சொன்னார். வலப்புற மார்பகத்தில்  ஐம்பது சென் அளவில சிறியதா ஒரு கட்டி இருக்கு....அதன் திசுவை எடுத்து டாக்டர் லேப்புக்கு அனுப்பியிருக்கிறார். அடுத்தவாரம் வரச்சொல்லியிருக்கிறார். பயமாத்தான் இருக்கு..! வரக்கூடாத வியாதி ஏதும் வந்திடப் போகுது.......!”
“புலி அடிக்கும் முன்னே....கிலி அடிச்சிடும்னு சொல்லுவாங்க....! வீணா..... நீ  எதையோ  கற்பனை பண்ணிக்கிட்டு மனசப்போட்டு வருத்திக்காதே......!  வேலை முடிஞ்சி நாளைக்கு மாலையில வீட்டுக்கு வர்ரேன். பிறகுப் பேசிக்கலாம் .....!” போனை வைத்த மங்கைக்கு மனசு என்னவோ போல் இருந்தது. சுசிக்குக் கெட்டது எதுவும் நடந்து விடக்கூடாது. கடவுளே......! நீதான் அவளைக்காப்பாத்தனும். மனதார வேண்டிக்கொள்கிறாள்.
       சுசி, மங்கையை வழக்கம் போல் முகமலர்ச்சியுடன் வரவேற்கிறாள். அவளிடம் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. பயந்தது போல் சுசி இல்லாததால் மனம் ஆறுதல் அடைகிறாள். நீண்ட நேரம் பேசிவிட்டு மங்கை வீடு திரும்பினாள்.
       மறுவாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு சுசியை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் செல்கிறாள் மங்கை. டாக்டரின் ரிப்போட்டை அறிந்து கொள்ள  இருவரும் பதற்றமுடன் டாக்டர் முன் அமர்ந்திருக்கின்றனர். சுசியின் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது!   கைக்குட்டையால் முகத்தைத் துடைத்த வண்ணமாக இருக்கிறாள்.
       “மிஸ்சஸ். சுசிலா....நான் சொல்லப் போர விசியத்தைக் கேட்டுத்  தயவு செய்து அதர்ச்சியடைய வேண்டாம். இன்றைய மருத்துவ உலகம் மிகவும் வளர்ந்திருக்கு, நிச்சயமா உங்களுக்கு வந்திருக்கிற வியாதி குணமாக்கக்கூடியதே......!” மருத்துவர் இப்படி பீடிகை போடும் போதே ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்று பயந்து போகிறாள் சுசி...! வலது கையால் மங்கையின் இடதுகையை இறுகப்பற்றுகிறாள். ஆறுதலுக்காகச் சுசியின் கையைப்பற்றிக்கொள்கிறாள் மங்கை.         
        டாக்டர்,சுசிலாவை ஒரு கணம் கூர்ந்து பார்க்கிறார்,“ மிஸ்சஸ் சுசிலா உங்களின் ரிப்போர்டைப் பார்த்தேன்,உங்களுக்கு ஏற்பட்டிருப்பது ஆரம்ப  நிலையிலான மார்பகப் புற்றுநோய்!  நிச்சயமா அந்த நோயைப் பூரணமாகக் குணமாக்கிடலாம். நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நாளையே   சிகிட்சியை ஆரம்பிக்கலாம்!” என்று நிதானமாகக் கூறுகிறார்.
         நடப்பது கனவா....நனவா....என்பதை அறிந்து கொள்ளமுடியாமல் ஒரு கணம் பேசா மடந்தையாக அசைவற்று அமர்ந்திருக்கிறாள் சுசி. மங்கை அவளது கரங்கயைப் பற்றி மெதுவாய் அசைத்த போதுதான் சுசி சுயநினைவுக்குத் திரும்புகிறாள். 
         தன் வாழ்வே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக  எண்ணி கண்ணீர் விடுகிறாள் சுசி! மங்கை அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆறுதல் படுத்துகிறாள்.நெஞ்சில் தலைவைத்துக் கண்ணீரைச் சிந்தும் சுசியின் தலையைத்தடவிக்கொடுகிறாள்.
         டாக்டர்.... இப்போது சுசியின் கண்களுக்குத் தெய்வமாகத் தெரிகிறார்! அவர் மட்டுமே தம்மைக் காப்பாற்ற முடியும் என்று திடமாக நம்புகிறார்.ஆறுதலும் தேறுதலும் கூற உயிர்த் தோழி மங்கை கூடவே இருக்கிறாள்.  இரும்பு மனுசி என்று தம்மை அடிக்கடிக் கூறுவாளே மங்கை, அவளது கூற்றை மெய்பிக்க வேண்டிய நேரம் தமக்கு வந்துவிட்டதோ என்று எண்ணுகிறாள்.             
          மீண்டுமொரு சத்தியசோதனைக்குத் தயாராகிறாள் சுசி. வாழ்வா சாவா என்ற அக்கினிப் பரீட்சையில் துணிவுடன் சிகிட்சையை மேற்கொள்கிறாள் சுசி.
          ஆறுமாதச் சிகிட்சையை. மிகவும் கடினமாநமங்கை அருகிலிருந்தே கவனித்துக் கொள்கிறாள். சுசிலா மிகவும் மெலிந்து காணப்படுகிறாள். பார்த்தவர்கள் இவர் சுசிலாதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது! நோயின் தன்மை அவளை உருகுழையச் செய்திருந்தது! எனினும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் அவள் வாழும் காலம் நீண்டுகொண்டிருந்தது!
         மருத்துவக் காரணங்களுக்காகச் சுசி பதவி ஓய்வு பெற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்கிறாள். மாதாந்திரப் பென்சன்  பணம் சுசிக்குக் கைகொடுக்கிறது! கிரஜுயூட்டி பணமும் கணிசமாகக் கிடைக்கிறது. இவ்வளவுப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன  செய்வதென்று புரியாமல் தடுமாறுகிறாள்.
         கணவருடன் வாழும் காலத்தில் பணத்தைச் சேர்ப்பதில் அவருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்களை எண்ணிப்பார்க்கிறாள். தான் அவ்வாறு கடுமையாக நடக்காமல் இருந்திருந்தால் கணவர் தன்னைவிட்டுப் போயிருக்கமாட்டார்.இப்போது, தனிமரமாய் நின்று அவதிப்படவும் தேவை இல்லையே! காக்கவேண்டிய ஒரு குடும்ப மரபு, தன்னால் சிதறுண்டுப் போனதை எண்ணி கண் கலங்குகிறாள்! காலம் கடந்து வந்த ஒரு சிந்தனை என்றாலும் காலம் மனிதனுக்குப் பல உண்மைகளை உணர்த்தும் என்பதை அவள் இப்போது மிகத்தெளிவாக உணர்ந்து கொள்கிறாள்.
        ஏனோ தெரியவில்லை.....சுசி இப்போது வேறுவிதமாகச் சிந்திக்கிறாள். தனிமையும் முதுமையும் அவளுக்குப் பல தெளிவுகளைக் கொடுத்திருக்க வேண்டும். சிந்தனையில் தெளிவும் ஞாயங்களும்,இப்போது யாருடைய தலையீடும் இல்லாமல்  அவளிடம் வரிசைப் பிடித்து நிற்கின்றன.
       தீர்க்கமான அவளது அண்மைய முடிவுகளைக்கண்டு மங்கை வியந்து போகிறாள்.சிலவேளைகளில் தான் எடுத்து வைத்த ஞாயங்களைப் புறக்கணித்தவள் இன்று அதனை ஞாயப்படுத்திப் பேசுவதும் ஏற்ற நடவடிக்கைகளில் துணிவாய் இறங்குவதும் மகிச்சியைக் கொடுக்கிறது.காலம் கடந்தாகிலும் உண்மையை ஏற்றுக் கொண்டாளே! மங்கையின் விழியோரம் பனியாய்த் தொக்கி நிற்கிறது ஆனந்தக் கண்ணீர்.   
         “ மங்கை....எனக்காக நீ எவ்வளவோ உதவிகளைச் செஞ்சிருக்கே...கடைசியா நான் கேட்கப் போற உதவியைத் தட்டாமல்  செய்வாயா....?”
         “ சுசி....நீ நல்லாதானே இருக்கிறே....?  திடீர்னு உனக்கு என்ன ஆயிடுச்சு....?” கலவரத்துடன் கேட்கிறாள் மங்கை.
         “ எனக்கு ஏதாச்சும் நடந்தா.....!”
         “ சுசி.... என்ன நீ பைத்தியம் போலப் பேசிக்கிட்டு இருக்கே....? உனக்கு  ஏற்பட்டுப் போன நோய் பூரணமாகக் குணமாயிடுச்சு. அசம்பாவிதம் ஏதும் நடக்காது...! உன் பக்கத்தில நான் இருக்கேன் இல்லே......! நீ தைரியமா இரு....!”
          தன் அந்திமக் காலம் நெருங்குவதைக் கண்டு சுசி,கணவருக்குச் சேரவேண்டிய அனைத்துச் சலுகைகளையும் பெறச்  சட்டமுறைப்படித் தோழி மங்கையின் உதவியுடன் செய்து முடிக்கிறாள்.
        ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து ஒரு வாரமே ஆயிருந்த வேளை அந்த வட்டாரத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்திலிருந்து வருகை புரிந்த சில அதிகாரிகள்,நோயினால் காலமாகிப் போனக்  கணவரின் இறப்புச் செய்தியைச் சுசியிடம்  கூறிவிட்டுச் செல்கின்றனர்.

                                           முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை