முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செல்லப்பிள்ளை



சிறுகதை:                செல்லப்பிள்ளை                             12.1. 2020
                                             வே.ம.அருச்சுணன்          
    
அம்மா...பை...! பை....!”
“கவனம்....கவனம்..... கோதை”
“சரிம்மா...!”
“படிப்பு முடிஞ்ச கையோட..மக  வேலைக்குக்  கிளம்பிட்டாளே !”  
“குடும்ப கஸ்டம் தெரிஞ்சவ...அரசி!”
வீட்டுக்கு அவள் ஒரே பெண் குழந்தையானாலும், ஆண் குழந்தையைப் போல தைரியமா வளர்க்கின்றனர் பெற்றோர். தற்காப்புக் கலைகளிலும் அவள் தேறியிருந்தாள்! வயதான பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும்!வாழ்க்கையில் அவள் இதுவரையில் பெரிய கனவுகள் எதனையும் பதியம் போடவில்லை என்றாலும் மனதின் உள்ளீடாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசாபாசங்களும் இல்லாமலிருக்குமா என்ன? பெற்றோருடன் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பது அவளது முதன்மை எண்ணம்!  
காலம் வேகமாக ஓடுகிறது!  ஐந்தாண்டுகளாக வேலை செய்யும் கோதையின் திறனைப் பார்த்து சுப்பவைசர் நிலைக்கு உயர்த்துகின்றது நிர்வாகம்.பதவி உயர்வு, கூடிய சம்பளம் கோதையின் வாழ்க்கை பூங்குன்றாய் மிளிர்கிறது!
“பத்து வருசமா கம்பேனிக்கு மாடாய் உழைக்கிறோம்...!  இப்ப வந்த  கோதைக்கு....புரோமோசனா...?” ஒரு சிலரின் மன எரிச்சல், கோதை தொடர்ந்து பல தொல்லைக் குள்ளாகிறாள்!
“கோத...என்னம்மா ஒரு மாதிரியா இருக்கே...? வேலையிடத்துல ஏதும் பிரச்சனையா?”
“நிம்மதியா.... வேலை செய்ய விடமாட்டேங்கிறாங்கம்மா..!”
“என்ன நடந்துச்சு?”
“கம்பேனியில களவு போன பொருள்களுக்கு நான்தான் காரணம்னு,  சிலர் கொடுத்த புகார்னால, இன்று காலை இரண்டு மணி நேரம் போலிஸ் இஸ்டேசன்ல, போலிஸ் என்னிடம் விசாரணை நடத்தினாங்க...!”
“நீ....என்னம்மா சொல்ற? இப்ப....நல்லதுக்கு காலம் இல்லாம்ம போயிடுச்சும்மா!         பின்ன என்னம்மா ஆச்சு சொல்லுமா?”
“கொடுத்த புகாரில் உண்மையில்லன்னு தெரிஞ்சதும் என்னை விட்டுட்டாங்க...!” “என் அப்பாவி பிள்ளை மேல..... இப்படியா பழிப்போடுவாங்க....
? பழிபோட்டவங்க உருப்படுவாங்களா....?
“விடும்மா...அதான்  ஒன்னுமில்லனு ஆயிடுச்சில்ல...!”
வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட, சதி வேலைகளைப் பற்றி பெரிதாய் ஒன்றும் அலட்டிக்  கொள்ளாம வழக்கம் போல கவலை ஏதுமில்லாமல் தன் வேலையில் கவனத்தைச் செலுத்துகிறாள் கோதை.
 காலம் வேகமாக ஓடுகிறது!
“நம்ம கண்ணே பட்டிடும் போல இருக்குங்க....!”
“என்ன சொல்ற அரசி...?”
“கோதை...பார்க்க ரொம்ப அழகா இருக்கா...இல்லிங்க!”
“கோதை....என்ன சின்னக் குழந்தையா? இப்ப அவ ஒரு பருவ மங்கை...!” சொல்லி சிரிக்கிறார்.
“ஏங்க....இந்த ஆண்டுக்குள்ளாற கோதைக்குக்....கலியாணத்த முடிச்சிடுனுங்க...!”
“அதுக்கென்ன மக கல்யாணத்த ...ஜாம் ஜாம்னு முடிச்சிடுவோம்! அதுக்கு முன்னாடி அவ யாரையும் விரும்புறாளான்னு கேளு அரசி!
“நான் அவள கேட்டுட்டேங்க....! அவ மனசுல யாரும் இல்லேங்க....! நாம பாக்கும் மாப்பிளையக் கட்டிக்கிறதாச் சொல்லிடுச்சிங்க...!”
“ஓ...ஏற்கனவே கோதை உங்கிட்ட  சொல்லிட்டாளா?”
“ஆமாங்க....இனியும் தாமதம் செய்யாம கல்யாணத்த....உடனே முடிச்சிடுங்க...!” மனைவி அவசரம் காட்டுவது குமாருக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
“கோதைக்கு....இப்பதானே வயசு இருபத்து மூனு...! இன்னும் கொஞ்ச நாளைக்கு நம்மோடு இருக்கட்டுமே...?”  
“என்னங்க நீங்க....விசியம் தெரியாமப் பேசிக்கிட்டு இருக்கிறீங்க...?”
“என்ன சொல்ற....அரசி?”
“பொண்ணுங்க.... கண்ணுக்கு அழகா, இருக்கும் போதே...சட்டுப்புட்டுன்னு...கல்யாணத்த முடிச்சிடனுங்க...! நாமா நாள தள்ளிப்போட்டா.....பொண்ணுக்கு  வயசு மட்டும் ஏறது மட்டுமில்லாம, நல்லா சாப்பிட்டுக் குண்டானப் பொண்ணுங்களக் கண்டுக்காமப் போயிடுவாங்க இந்தக் காலத்து மாப்பிள்ளைங்க...! காற்றுள்ள போதே தூற்றிக்கனும்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வைச்சிருக்காங்க.....?    
“ஓ....இதுல இப்படிப்பட்ட வில்லங்களும் இருக்கா அரசி? இனி நான் எந்த கருத்தையும் சொல்லப் போறதில்ல! உன் விருப்பப்படி... நாளைக்கே என் நண்பன்  நாதனைப் போய்ப்  பார்க்கிறேன். காரியத்தக் கச்சிதமா முடிக்கிறேன்...சரிதானே அரசி!”  
குமார் தன் பால்ய நண்பனைச் சந்திக்கிறார்....!  
“நான் இருக்கும் போது.....நீ  எதுக்கும் கவலைப்படாதே குமார்?. எனக்கு ஒரு சொந்தக்காரப் பையன் இருக்கிறான். குடும்பத்துல ஒரே பையன். அவனுக்குப் படிப்பு குறைவு. கம்பனியில சாதாரண வேலை செய்யிறான்.ஆனா..கைநிறைய சம்பாதிக்கிறான். விருப்பன்னா சொல்லு.... பையனப் போய்ப் பார்க்கலாம்”   
படிக்கிற காலத்தில இருந்து நாதன் தன் கூடவே இருக்கிறவன். குடும்பத்தில நல்லது...கெட்டதுல தவறாமக் கலந்து கொள்றவன். மகளுக்கு அவன் மாப்பிளைப் பார்க்கும் விசியமும் சரியாகத்தான் இருக்கும். மாப்பிளைக்குப் பெரிய படிப்பு, பெரிய வருமானம் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் மகளைக் கண்கலங்காமல் பார்த்துக்கிட்டாலே போதுமென குமார் நினைக்கிறார்.
உற்றார் உறவினர்களோடு மாப்பிள்ளை வீட்டாருக்குச் செல்கிறார் குமார். மாப்பிள்ளை மாறன் பார்க்கச் சுமாராக இருந்தாலும் அதிகமான எதிர்பார்ப்புகள் இல்லாததால், பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையைப் பிடித்துவிடுகிறது!   இருகுடும்பத்தினரும் திருமணத்தைப் பேசி முடிவெடுத்த மறுமாதத்திலேயே   திருமணமத்தையும் நடத்தி முடிக்கின்றனர்!
மகளின் திருமணம் நினைத்த மாத்திரத்தில் நடந்து போனதில் கணவன் மனைவி இருவருக்கும் எல்லாமே கனவில் நடந்தது போல் உணர்கின்றனர்.எதிர்பாராததை எதிர்பார்ப்பதுதான் வாழக்கையோ என்றும்  எண்ணி வியந்து போகின்றனர்!
“மக...கல்யாணம் இவ்வளவு சீக்கிரத்தில நடக்குமுனு நான் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலங்க...! அப்பவே...நீங்கச் சொன்னிங்க...! நான்தான் உங்கப் பேச்சைக்கேட்காமல் பிடிவாதமா இருந்துட்டேன்! நினைச்சுப்பார்த்தா வருத்தமா இருக்குங்க! சின்னப் பொண்ணு கோதை.... இன்னும் கொஞ்ச நாள்  நம்மோட இருந்திருக்கலாம்னு...! ம்....! இப்பப் பாருங்க நமக்கு யாரும் இல்ல....! இரண்டு பேர்மட்டுமே வீட்டுல தனியா இருக்கிறோம் ....! ”
“எது....எப்ப நடக்கனுமோ....அது கண்டிப்பா அந்த, அந்த  நேரத்துல அது தானா  நடக்கும்....! மகளுக்கு கல்யாண நேரம் கூடிவந்துடிச்சு.! வந்த மாப்பிளைய விட்டுட்டா... மறுபடியும்....நாம விரும்பும் நேரத்துல மாப்பிள்ளை அமையாமப் போயிட்டா...?”   
தேடிவந்த வரன தவறவிட்ட எத்தனையோ பெண்ணுங்க..... கல்யாணம் ஆகாமலேயே முதிர்கன்னிகளா வாழ்க்கைய முடிச்சிக்கிட்டவங்களப் பார்த்திருக்கேன்...! என் மனசுலப் பட்டதச் சொல்றேங்க....! எனக்கென்னவோ மக கல்யாண விசியத்துல நாம கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோனு தோனுதுங்க...!”
“அரசி......!”
 “ஆமாங்க.....மாப்பிளையப் பற்றி முழுமையாத் தெரிஞ்சிக்காமச் சீக்கிரமா மகள கட்டிக்கொடுத்திட்டோமோனு...நினைக்கிறேங்க....! ”
“மாப்பிள்ள வீட்டைப் பார்க்க நீயும்தானே வந்தே...?”
“அதெல்லாம் சரிதாங்க....! திருமணம் முடிஞ்சு....மாப்பிளையும் பொண்ணு வீட்டுக்கு வந்தப்போ....அவுங்களுக்கு நான் ஆரத்தி எடுத்து..., ஆசை....ஆசையா என் கையால பாலும் பழத்தையும் ஊட்டினப் போது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு தெரியுங்களா....?
“அன்றைக்கு உன் முகத்துலப் பார்த்த சந்தோசத்தப் போல.....நான் என்றைக்கும் பார்த்ததில்ல...!”
இப்பப் பாருங்க... கண்யாணம் முடிஞ்சு....மூனு மாசம் ஆயிடுச்சு....! ஒருநாளுகூட மாப்பிள்ள,  மகள  நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரலியே...?”  
“அரசி...எதுக்கு நீ இப்போ கண்ணக் கசக்குற...?”
“ஏங்க....நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே....?”
“ஆமா...அதுக்கு என்ன இப்போ?”
“கோதையப்...போய்ப் பார்த்துட்டு வரலாங்க.....! மகளப் பார்த்து ரொம்ப நாளாச்சி....  கண்ணுக்குள்ளேயே இருக்கிறாங்க....!”
“எனக்கும்....மகளப் பார்க்கனும் போலதான் இருக்கு....!”
“மகளப் பார்க்காம உங்களாளையும் இருக்க முடியலப் பார்த்திங்களா....!
“அரசி....நமக்கு என்ன பத்து பிள்ளைங்களா இருக்காங்க....? ஒன்னே...ஒன்னு கண்ணே...கண்ணுண்ணு....ஒரே பிள்ளை கோதை. மூனு மாசமா அவளப் பார்க்காம இருக்கிறோமே....அவ நினைப்பு வராமலா இருக்குமா?”
“ஹல்லோ....கோதையா...?”
“அம்மா.....கோதைதான் பேசுறேன்....!
“கோதை எப்படிம்மா இருக்கே...?”
“நல்லா இருக்கேம்மா....நீங்களும் அப்பாவும் எப்படிம்மா இருக்கீங்க?”
“நாங்க நல்ல  இருக்கோமா....! உன்னையும் மாப்பிள்ளையும்  பார்க்க நாளைக்கு  அங்கே வர்றோம்மா....!” 
“நேர்ல உங்களப் பார்க்க ஆவலா இருக்கேம்மா....!
ஞாயிற்றுக்கிழமை மதிய வேளைக்கு முன்பாகவே கோதையின் வீட்டையடைகின்றனர் பெற்றோர்.
“வாங்கம்மா....வாங்கப்பா....!” அம்மாவையும் அப்பாவையும் கட்டிப்பிடுத்திக் கொள்கிறாள் கோதை! மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தன..... மூவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமழை பொழிகின்றனர். அவர்களிடையே  ஆனந்த கண்ணீரும் கரைபுரண்டோடுகிறது!
“மாப்பிளை...எங்கம்மா...?”                                                                     
“வெளியில் போயிருக்கிறாரு,  வந்திடுவாரப்பா....! இன்னும் பத்து நிமிசத்துல சமையல் முடிஞ்சுடும்....! அம்மா...!அப்பா....! நீங்க கொஞ்ச நேரம் டீவி பார்த்துக்கிட்டிருங்க....இதோ வந்திடுறேன்!” சமையல் அறைக்கு விரைகிறாள் கோதை!
இருக்கையில் பெற்றோரை அமரச்செய்துவிட்டு, கோதையின் முகத்தில் முத்து முத்துதாய் அரும்பி நிற்கும் வியர்வைத் துளிகளைத் தன் சட்டையில் அவசர அவசரமாய்த் துடைத்துக்  கொண்டு, இன்னும் முற்று பெறாமலிருக்கும் சமையலைத் தொடர்கிறாள்!
தனியொரு ஆளாய்ச் சமையல் செய்வதில் பம்பரமாய்ச் சுழல்வதைப் பெற்றோர் இருவரும் கண்கூடாகப் பார்த்து வியந்து போகின்றனர்! திருமணத்திற்கு முன்பாக வீட்டில் ஒருநாளும் அவள் சமையல் செய்ததில்லை. தானும் மகளைச் சமைக்கவும் அனுமதித்ததில்லை....! இன்று மகள் சமைத்த உணவுகள் எப்படி இருக்குமோ...? என்ற கவலை   அம்மாவுக்கு வந்துவிடுகிறது!
“ஏங்க...வீட்டுல கோதை செல்லப்பிள்ளையா வளர்ந்தவ, சமையல் செய்வதை ஒரு நாளும் சொல்லித் தந்ததில்லைங்க....எப்படி மூனு மாசமா எப்படி சமாளித்தாளோ?
“அரசி....! நம்மப் பொண்ணு சமத்து...!அவள் எதையும் சமாளிச்சிடுவா...!”
“அப்படித்தாங்க நானும் நம்புறேங்க....!”
“மாப்பிள்ள....கோதைய வீட்டுலத் தன்னந்தனியா விட்டுட்டுப் போயிருக்கிறாரே...! தினமும் இப்படித்தான் மக தனியா இருப்பாளோ....?”  அப்பா வருத்தப்படுகிறார்!
“புதுசா கல்யாணம் ஆனப் பொண்ணு.....! காலம் கெட்டுக்கிடக்குது...! இப்படித்தனியா விட்டுட்டுப் போவலாமா...? வந்ததும் மாப்பிள்ள நான் கேக்கப் போறேங்க...!
“அரசி....அவுங்க குடும்ப விசியத்துல நாம ஏன் வீணா மூக்கை நுழைக்கனும்?
“மக...கஸ்டப்படுறத எப்படிங்கப்  பார்த்துக்கிட்டு இருக்கிறது...?”
“அமைதியா....இரு அரசி! கோதை...வர்ரா...!”
அரக்கப் பறக்க வந்த கோதை, தான் சமைத்த உணவுகளைக் கொண்டு  மேசை மீது வைக்கிறாள்! உணவுகள்  ஆவி பறக்கின்றன! அவை  நல்ல மணமாகவும் இருக்கின்றன....!
“அம்மா...அப்பா...சமையல் செய்ய நேரமாயிடுச்சு....மன்னிச்சிடுங்க...!”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லம்மா...!”
“கோதை...உன் சமையல் மணக்குது... எனக்கு ஆச்சரியமா இருக்கு!” அப்பாதான் மகள் சமையலைப் புகழ்கிறார்.
“அம்மா....எனக்குத் தெரிஞ்ச வரையிலும் சமைச்சிருக்கேன்...சாப்பிடுங்கம்மா...!”
உணவுகள் பரிமாறப்படுகின்றன. சாப்பிட்டவுடன் அம்மா கொஞ்சமமும் எதிர்பார்க்கவில்லை! மூன்று மாதக்காலத்தில் சுவையாகச் சமையல்  செய்வதில் முத்திரரைப் பதித்துவிட்ட கோதையின் திறனை வெகுவாகப் பாராட்டுகின்றனர். பெற்றோரின் பாராட்டில் கோதை உச்சிக்குளிர்கிறாள்!
 “கோதை...நாங்க வர்றது மாப்பிள்ளைக்குத் தெரியும்தானே...?”
“தெரியும்மா.... ! இந்த நாள்ள வழக்கமா கூட்டாளிங்களப் பார்க்கப் போவாரு... ஆனா., இன்னைக்குச் சீக்கிரமா வந்திடுவேன்னு சொல்லிட்டுப் போனாரும்மா!”
சின்ன வயசிலேயே அம்மா அப்பா இருவருமே இறந்திட்டாங்க! சித்திதான் அவரை  வளர்த்தாங்க. திருமணம் முடிஞ்சதும் தனிக்குடுத்தினம் அனுப்பிட்டாங்க. அவரோட கூடப்பிறந்தவர்கள் யாரும் இல்லை. கூட்டாளிங்கதான் அவருக்கு எல்லாம். கல்யாணத்துக்கூட அவங்கதான் பணவுதவி செஞ்சிருக்காங்க!
மாப்பிள்ளையப் பற்றிய தகவலை மகள் கூறியதைக் கேட்டு பெற்றோர் வாயடைத்து போகின்றனர்! செல்லமா வளர்த்த மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ....? என்ற திகில் அவர்களின் தலையில் இடியாய்ப் பாய்கிறது! தவறு செய்துவிட்டோமோ....என்றும் எண்ணிப்பார்க்கின்றனர்!
கோதை மட்டுமே வீட்டில் தனித்திருந்ததால், மூன்று மாதங்களாகப் பேச வேண்டிய பல விசியங்களை மூவரும் பரிமாறிக் கொள்கின்றனர்.சாப்பாட்டு வேளையும் முடிந்தது. மாலை மணி நான்கை தாண்டியும் மாப்பிள்ளை வீடு திரும்பும் தடையங்கள்  இல்லாததால் பெற்றோர்  கவலையுடன் வீடு திரும்புகின்றனர்!
பெற்றோர் சென்ற சிறிது நேரத்தில் மாறனும் வீடு திரும்புகிறான்! வாசலில் காத்துக்கொண்டிருந்தால் கோதை!
“ஏங்க....வீடு திரும்ப இவ்வளவு லேட்டு?”
“லேட்டாதான் வருவேன்! அதுக்கு என்ன இப்போ...?” கணவனிடமிருந்து வீசிய மது வாடை...கோதைக்குக் குமட்டலை ஏற்படுத்துகிறது!
“அம்மா,அப்பா....உங்களுக்காக மத்தியானத்தில இருந்து காத்துக்கிட்டிருந்தாங்க”
“அவுங்க....ஏன் எனக்காகக் காத்திருக்கனும்...?”
“உங்களப் பாத்துட்டுப் போகத்தான்...!”
“எதுக்கு என்னைப் பார்க்கனும்...? குடியும் குடுத்தனமுமா நா....நல்லாதானே இருக்கேன்...! இனி அவுங்க என் வீட்டுப்பக்கம் வந்தா...உன்ன தொலைச்சிப்புடுவேன்...!” கோதையை நோக்கிக் கையை உயர்த்துகிறான்!
மாறனின் சொற்களால் கோதை....நடுநடுங்கிப் போகிறாள்...! கணவனைக் கேள்வி கேட்ட முதல் நாளிலேயே இப்படியொரு பயமுறுத்தலா...? சிறிது நேரம், கூட்டுக்குள் அடங்கிய ஆமை யாகிப் போகிறாள் கோதை! மூன்று மாதத்திற்கு முந்திய இனிய காலத்தைச் சில வினாடிகள் எண்ணிப்பார்க்கிறாள் கோதை!
திருமணம் முடிந்த மறுநாளே, கோதையின் ஏடிஎம் கார்டு, கையில் வைத்திருந்த பணம்,அணிந்திருந்த நகைகள் யாவும் மாறன்  கைவசமாகின்றன...! ஒரே நாளில் தம்மைச் செல்லாக் காசாக்கி, வேலை வெட்டிக்குப் போகாமல் எந்நேரமும் மது போதையில் இருக்கும் மாறனை இனியும் நம்பி...?
போதையோடு வந்த மாறன், அந்த மாலைப் பொழுதில், நீண்ட குறட்டை ஒலியோடு தூங்கிக் கொண்டிருக்கிறான்....! கோதை ஒரு கணம் அவனை தீர்க்கமாகப் பார்க்கிறாள்!
அடுத்த சில வினாடிகளில் மாறன், “ஐயோ...அம்மா...!” என்றவாறு பெரும் அலறலுடன், துடித்து எழுகிறான்...! கைமீது ஏற்பட்ட கடும் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாதவனாய்த் தடுமாற்றமுடன் தன் முன்னே நிற்கும் உருவத்தை அதர்ச்சியுடன் பார்க்கிறான்.....! அவன் முன், பெரும் தடியோடு கோதை அகங்காரக் காளியாக நிற்பதைக் கண்டு, நெடுநாளாய் அவனுடன் அணுக்கமாய்க் குடிகொண்டிருந்த போதை அவனை விட்டு எங்கோ தலைதெறிக்க ஓடுகிறது...!  
                                             
                                    ------முற்றுகிறது----
                                               













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை