முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வனவாசம் போகும் கனவு


சிறுகதை:                 வனவாசம் போகும் கனவு                
                                    வே.ம.அருச்சுணன் 

அழகிய அந்த மலர் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களைப் பார்த்து மெய்மறந்து  இரசித்து கொண்டிருக்கிறேன். ஆனால், அருகில் அமர்ந்திருக்கும் பூவை எதையோ தீவிரமாகச் சிந்திப்பது போல வேறு திசையை நோக்கி மௌனமாக அமர்ந்திருக்கிறாள்!
“பூவை...என்ன மூடியா இருக்கே...?”
“புதுசா என்ன சொல்லப்போறேன்....எல்லாம் நம்ம கல்யாண விசியம்தான்...!”
“அதான்....சொல்லிட்டேனே பூவை....! என்னோட கனவு முதல்ல நிறைவேறன பிறகுதான்....மற்ற விசியங்கள் எல்லாம்!”
வழக்கமான என் பதிலால், முகம் வாடிப்போன பூவை கோபமுடன் அங்கிருந்து புறப்படுகிறாள்!
மறுநாள் நான் வேலையில் மும்முறம் காட்டிக்கொண்டிருக்கிறேன்.  ஆனால், நேற்று மாலை பூங்காவில் பேசிக்கொண்டிருக்கையில், பூவை கோபித்துத்து கொண்டு போனது என் மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது! அதனால் என்னவோ வேலையில் கவனம் செலுத்து முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்! மனம் ஒருநிலையில் இல்லாமல் குழப்பமாகவே இருக்கிறது. 
யாருக்காகவும் நான் என் வாழ்க்கைய தொலைக்க விரும்பல! பிறருடைய ஆசாபாசங்களுக்கு என் வாழ்க்கை ஒருபோதும் பகடக்காயாக மாறுவதையும் நான் அனுமதிக்கப் போவதில்லை. என் வாழ்க்கையப் பிறருடன் பகிரும் நடைமுறைகளுக்கு நான் அந்நியம்தான்! எனக்கான வாழ்க்கையை நானே பதியம் போடுவேன்...! அதில் பிறரின் தலையீடு இருக்காது! என் வாழ்க்கையை நான் என் விருப்பம் போல் வாழப்போறேன்! பிறருக்காக நான் ஏன் மாறனும்?
கால நேரம் தெரியாமல், கைபேசி சிணுங்குகிறது...!
என் சிந்தனையிலிருந்து நான் தற்காலியமாக விடுபட்டு கைபேசியைப் பார்க்கிறேன். மறுமுனையில் பூவை அழைப்பில் இருக்கிறாள். நேரத்தைப் பார்க்கிறேன். அது சாப்பாட்டு நேரம்தான்.....என்ன பண்றது.....? அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகள் இன்னும் தலைக்கு மேல இருக்கே!
கைபேசியின்  சிணுங்கல் தொடர்கிறது....! ஆனாலும் நான்  வேலையைத் தொடர்கிறேன். சில வினாடிகளில் கைபேசி ஒலி தானாகவே ஓய்ந்து போகிறது! “அப்பாடா...தொல்லை விட்டது!”  என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு  வேலையில் ஐக்கியமாகிறேன்.
ஐம்பதாவது மாடியில் அமைந்திருக்கும் எனது அலுவலகம் சிறிது நேரமே அமைதியில் மூழ்கியிருக்கும்.... என் எதிரே புன்முறுவலோடு நிற்கிறாள் பூவை....!
இப்படி பல வேளைகளில் என்னை திக்குமுக்காடச் செய்து, அவளது காரியத்தை சாதித்துக் கொள்வதில் சமத்துதான்!
“ஐ....யம் வெரி...வெரி சோரி...!” தடுமாற்றமுடன்  அவளை நிமிர்ந்து பார்க்கிறேன்.
“எழில்...நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்...! அப்பா கீழே கெண்டீன்ல காத்துக்கிட்டு இருக்கிறாரு....!”
“அப்பாவா...!  எதுக்கு இவ்வளவு தூரம்...?”
“பதற்றப்படாதிங்க...ஏதோ முக்கிய விசியம் போல...!”
சிறைக் கைதியாய் நான் அவளைப் பின் தொடர்கிறேன்.
சாதாரண குடும்பத்தில் நான் பிறந்ததாலோ என்னவோ, வாழ்க்கையில் பெரியதாக இல்லாவிட்டாலும் என்னளவில் ஓரளவு  சாதிக்க வேண்டும்.குடும்பத்தைக் காப்பாற்றனும். இதற்கு யாரும் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறேன்.
தொலைத் தொடர்புத் துறையில் நான் படித்த படிப்புக்கு அமெரிக்கா கைகொடுத்தது. பெரிய நிறுவனம்; பெரிய சம்பளம். நினைத்தது விரைவில் நடக்கும் என்று திடமாக நான் நம்புகிறவன். இன்னும் சில ஆண்டுகளில் தன்னிடமுள்ள பொருளாதாரத்தைக் கொண்டு சுயமாக நான் பிறந்த நாட்டில் நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பது என்  கனவு!
நான் வேலை செய்து வரும் அதே நிறுவனத்தில் மாமன் மகள் பூவையும் பணிபுரிகிறாள். அவளுக்கு இருக்கும் வசதிக்கு பிறந்தகத்தை விட்டு, கடல் கடந்து வேறு நாட்டில் வேலை செய்ய வேண்டிய  அவசியமே இல்லை...! ஆனால், அவள் விருப்பத்துக்குப் பெற்றோர் தடை விதிக்காமல்,  முழுமையான இசைவைத்  தந்திருந்தனர்.
“வாங்க மாப்பிள.....” தாய்மாமா புன்னகையோடு என்னை வரவேற்கிறார்.
“நல்லா இருக்கிறீங்களா மாமா....?” பணிவுடன் வணங்குகிறேன்.
“அப்பா….எழில் இன்னும் இரண்டு வருசத்துக்கு இங்கேயே வேலை செய்யப்போறாராம்” சிணுங்கிறாள் பூவை துளிர்த்து நிற்கும் கண்ணீரைத் துடைத்தபடி.
“என்னங்க மாப்பிள்ள சொல்றீங்க...பூவை சொல்றது உண்மையா?”
“ஆமாங்க மாமா....நான் அமைக்கப் போற நிறுவனத்துக்குண்டான தொகை இன்னும் இரண்டு வருசத்துல சேர்ந்திடும்...அதுக்குப்பின்னாடி நாடு திரும்பிடுவேன்!”
“மாப்பிள இந்த வருசம் முடிய இன்னும் மூனுமாசம் இருக்கு...வேலைய விட்டுட்டு நாடு திரும்பி நம்ம கம்பேனியில சேர்ந்த கையோட, பூவைய உங்களுக்குக் கட்டிவெச்சிடுறேன்...நீங்க ரெண்டு பேரும் கம்பனிய ஜாம்...ஜாம்னு நடத்துங்க!” 
“நான் சுயமா சம்பாதிச்சு, கம்பேனிய அமைக்கிறதுதான் என்னோட கனவு மாமா...” கனிவுடன் கூறுகிறேன்.
“எழில்....உங்க கனவ....மதிக்கிறேன். மாமாவுக்கும் வயசாயிடுச்சு..... காலாகாலத்துல  உங்க இருவருக்கும் திருமணம் செஞ்சிட்டா,என் கடமை முடிஞ்சிடும்...! நானும் ஓய்வு எடுத்துக்கிறேன்…”
சாமானியக் குடும்பத்தில் பிறந்த என்னை ஓர் உயர்ந்தது நிலைக்குக் கொண்டு வருவதில் அம்மாவின் அண்ணன் என்ற முறையில் மாமாவின் பங்களிப்பு மிகுந்திருந்தது. பெற்றோர்களால்....செய்ய முடியாததை அவர் எனக்குச் செய்திருப்பவை எண்ணும் போதெல்லாம் உணர்ச்சியால் நான் மௌனமாகி விடுவேன்!  
“அப்பா சொல்றது சரியா வரும் எழில்...நாம அப்படியே செய்தாயென்ன...?
“..........!”
மௌனமுடன் பூவையப் பார்க்கிறேன்.அவள் முகம் பரிதாபமாக இருந்தது.
“நல்ல முடிவ எடுங்க மாப்பிள....” அமைதியுடன் கூறுகிறார் மாமா.
தன்னை காண்பதற்கு, முதுமையையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கொண்ட, தொலைதூரப்   பயணத்தால் மிகவும் சோர்வுற்றிருந்தார்! அவரைப் பார்பதற்கே எனக்குச் சங்கடமாக இருந்தது. எதையும் பேசாமல் மௌனம் காக்கிறேன்.
 “சரிங்க மாமா.....!” தலைகுனிந்து பணிவாய் கூறுகிறேன்.
ஆண்டு இறுதியில் நாடு திரும்பிய எங்களுக்கு மாமா சிறப்பாகத் திருமணத்தை நடத்தி வைக்கிறார். திருமணம் முடிந்த சில வாரங்களுக்குப் பிறகு நான் மீண்டும் அமெரிக்கா சென்று, முன்பு பணியாற்றிய அதே நிறுவனத்திலேயே வேலையில் தொடர்கிறேன்.
மாமா என் கனவுகளுக்கு அளித்திருக்கும் மரியாதைக்காக நான் தொடர்ந்து வெளிநாட்டில் உற்சாகமாக வேலை செய்ய முடிந்தது. பூவை அப்பாவின் நிறுவனத்தில் வேலை செய்யத்தொடங்கினாள். இரண்டு ஆண்டுகளில் நாடு திரும்பிவிடும் என் எண்ணத்தை அவள் மிகுந்த மன அழுத்தத்துடன் ஏற்றுக்கொண்டிருந்தாள்...!      
பொருளீட்டுவதற்காக தன்னந்தனியனாக எனது நாட்களை வெளிநாட்டில் நகர்த்துகிறேன். எனது கனவை நிறைவேற்றி கொள்வதில் நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருந்தேன்! ஆறுதல் வேண்டி,  மனைவியிடம் அவ்வப்போது தொடர்பு கொள்வேன். என் வேலை பற்றி மனைவிக்கு நன்கு தெரியுமாதலால், அவள் என் நலன்பற்றியே பெரும்பாலும் விசாரிப்பாள்; உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ள அக்கறையுடன் கூறுவாள்!
வருடத்திற்கொருமுறை தவறாமல் மனைவி அமெரிக்கா பறந்து வருவாள் சில நாட்கள் என்னுடன் தங்குவாள். அந்த நாட்களில் அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவாள்! வரும்போது அவள் இருக்கும் மகிழ்ச்சி நாடு திரும்பும் போது இருப்பதில்லை! வருத்தமுடனே அவள் திரும்பிச் செல்வதைப் பார்க்க எனக்கு  வருத்தமாகத்தான் இருக்கும்! சிறிது காலங்களில்  இதுவும் கடந்து போகுமென்று ஆறுதல் படுத்திக்கொள்வேன்.
வழக்கம் போல்  அன்று அலுவலகம் செல்வதற்காக சாலையோரம் நடந்து செல்கிறேன். அப்போது என்னைத் தாண்டிச் சென்ற கார் எதிர்பாராமல் இடித்துவிட்டுச் செல்கிறது!  நான் சாலையில் விழுகிறேன். அடிப்பட்ட காலிலும் தலையிலும் இரத்தம் வழிகிறது.அம்புலன்ஸ் மூலம் என்னை மருத்துவமனையில் விரைந்து சேர்க்கின்றனர்.வலி அதிகம் இருந்தாலும் நல்ல வேளை மயக்க நிலைக்குச் செல்லாமல் போனதற்காக ஆறுதல் அடைகிறேன்.
விரைவில் அமைக்கப் போகும் நிறுவனம் பற்றிய எண்ண அலைகளில் மிதந்து கொண்டிருந்த நேரத்தில் விபத்து நடந்துவிட்டதே! எனது கனவு கலைந்து போய்விடுமோ....? என்ற அச்சம்  மனதை அதிரச்செய்தது!
விபத்து பற்றிய தகவலை மனைவிக்குத் தெரிவிப்பதால் பிரச்சனை எழும் என்பதால் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் தெரிவிப்பதே நல்லது என்ற முடிவுக்குப்பின்,  ஒருவாரம் சிகிட்சைக்குப் பின்னர் இருப்பிடம் திரும்புகிறேன்.உடல் சோர்வாகவும், நடப்பதில் சிரமப்பட்டாலும் வழக்கம் போல் அலுவகத்திற்குச் செல்கிறேன்.பல ஆண்டுகள் நல்ல பெயருடன் வேலை செஞ்சாச்சு. இன்னும் கொஞ்ச நாள் இங்கே வேலை செய்யப் போகிறேன். கடைசி நேரத்தில் கெட்டப் பெயரை எடுக்க வேண்டாமேனு.... கவனமா  வேலை செய்கிறேன்!
மாலையில் வேலை முடிந்து என்  இருப்பிடத்திற்குத் திரும்புகிறேன். கைபேசி ஒலிக்கிறது!
 “பூவ...எப்படி இருக்கே...?” ஆவலுடன் கேட்டாலும், விபத்து பற்றிய தகவலை மனைவியிடம் மறைத்துவிட்டோமே என்ற உள்ளுணர்வு என்னை வருந்த செய்கிறது!
“நான்...நல்லா இருக்கேங்கே....!
“அப்பா....எப்படி இருக்கார்....பிஸ்னஸ் யெல்லாம் எப்படி போகுது?”
“அப்பா...நல்லாதான் இருக்கார். ஆனா....பிஸ்னஸ்தான் டௌனாயிடுச்சிங்க...!”
“என்ன சொல்ற பூவ....? இரண்டு மாசத்துக்கு முன்னாடிகூட பிஸ்னஸ் நல்லா இருக்குனு அப்பா சொன்னாரே....?”
“அண்மையில், நடந்த நாட்டின் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால நமது நாட்டுச் செம்பனை எண்ணையை இறக்குமதி செய்துவந்த  நாடுங்க.... திடீர்னு  ஆடர்களை இரத்து செய்திடுச்சிங்க....!”
“ஓ.....மைகாட்!”
“நம்ம கம்பனியோட….. முக்கிய வருமானமே, செம்பனை ஏற்றுமதிதானுங்க...?
“உண்மைதான் பூவ. அப்பா....இப்ப என்ன சொல்றாரு?”
“கம்பனிய மூடுறததவிர....வேறுவழி இல்லேன்றாரு...!”
“அப்பாவ....கவலைப்பட வேனான்னு சொல்லு. நான் நாடு திரும்பியதும் பேசி நல்ல முடிவெடுக்கலாம். இப்போதைக்கு அப்பாவ ஏதும் செய்யாம அமைதியா இருக்கச்சொல்லு...!”
“அப்பாவ பார்க்க மனச்சங்கடமா இருக்குங்க...! உடனே.... திரும்ப முடியாதுங்களா?”  “உனக்குத் தெரியாதா...பூவ. எதையும் எடுத்தேன் கவுத்தேன்னு....  நாம   செய்ய முடியுமா? விரைவா நாடு திரும்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்யிறேன்...!”
கனத்த குழப்பமுடன் கைபேசியை முடக்குகிறேன்!
 “அப்பா...நீங்க வீணா கவலைப்பட்டதிங்க...! உங்க மாப்பிள சீக்கிரமே நாடு திரும்பிடுவாரு....வந்ததும் எல்லாத்தையும் அவரு கவனிச்சிக்குவாரு...!”
“சரிமா....! மாப்பிள இருக்கும் போது எனக்கு என்னம்மா கவலை?”. பூவ...  மாப்பிள வர்ர வரைக்கும், நீ பதற்றப்படாம இரு. எல்லாம் நல்லபடியா நடக்கும்”
“சிரமப்படும் போது, அவரு நம்ம பக்கத்துல இல்லையப்பா...?”
“உன்னோட கவலையெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ள... தீரப்போவுது....!” அருகில் அமர்ந்து மகளின் தலையை ஆறுதலாக தடவிக் கொடுக்கிறார். அப்பாவின் மடியில் முகம் புதைத்த பூவை கணவனின் பிரிவாற்றாமையைத் தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீர் சொறிகிறாள்!
திருமணம் முடிந்ததுமே, பூவையை விட்டுப் பிரிந்துவிட்டேன்! இனியும் காலத்தைத் தள்ளாமல் அவளது கண்ணீரைத் துடைக்க  வேண்டும்! நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளில் நான் சுறுசுறுப்பாகிப்போகிறேன். பிரிவின் தாக்கத்தை இப்போதுதான் நான் முழுமையாக உணர்கிறேன்!
அதிகாலை நேரம்.....! உலகமே குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறது...! பனி மூட்டத்திற்கிடையில், பல மணி நேரம் பயணித்த விமானம், இன்னும் சில நிமிடங்களில்  நான் பிறந்த மண்ணில் தரையிரங்க போகிறது! மனைவியைக் காணப்போகும் அந்த தருணத்தை எண்ணிப்பார்க்கிறேன்!
அப்போது விமானம் தாழ்வாகப் பறந்து சென்று, ஓடு பாதையைத் தொட்ட போது, அதன் முதன்மைச் சக்கரம் வெடித்துச் சிதறுகிறது...!

                    


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை