முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் 
                      வே.ம.அருச்சுணன் 
சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும், பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும்,வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும்.
அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு,நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.
வழங்கப்படும் கல்வி இனங்களிடையே இணக்கப் போக்கையும்,நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துவதுடன், எதிர்காலச் சந்ததியினருக்கு நல்வழி காட்டுவதாகவும் அது வடிவமைக்கப்பட  வேண்டும்.கல்விச்சட்டம் வரையறுத்துள்ள தளத்திலிருந்து அணுவும் தடம் பிறழாமலும் பிசகாமலும் யாருக்கும் சோரம் போகமலும்  அரசின்  நடவடிக்கைகள் எந்நாளும் வலுவுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்படும் அரசு மக்களின் மனதில் தீர்க்கமுடன் இடம் பெறும்.மக்களின் விருப்பத்திற்குப் புறம்பாகச் செயல் படும் எந்த அரசும் குறைந்த ஆயுளுடன் மரித்துப் போவது தவிர்க்க முடியாததாகும்.     
2013 செப்டம்பர் 6ஆம் நாள்  கல்வி அமைச்சரும்,துணைப்பிரதமருமான டான்ஸ்ரீ மொகைதின் யாசின் அவர்கள் அறிமுகம் செய்த கல்விப் பெருந்திட்டம் 2013-202 மெக்கின்சி அண்ட் கோ  வெளிநாட்டு நிறுவனத்தினர் உருவாக்கியதாகும். இதற்குக் கட்டணமாக அந்நிறுவனத்திற்கு 2 கோடியே 50 இலட்சமாக வழங்கப்பட்டுள்ளது.நமது நாட்டின் கல்விக் கொள்கையை வகுத்த நமக்குச் சம்பந்தம் இல்லாத ஓர் அந்நிய நாட்டைச் சேர்ந்த  நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சேவைக்கட்டணம் மிகவும் அதிகமானது.
மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளதை ஒரு பொருட்டாகவே கருதாமல் வழங்கப்பட்ட இப்பெரிய தொகை நியாயமானதுதான் என்று கல்வி அமைச்சர் மொகைதின் அழுத்தமுடன் குறிப்பிடுகிறார்.மலேசிய மக்களால் வரைந்திருக்க வேண்டிய இக்கல்வி அறிக்கை,பொது மக்களின் ஆழ்ந்த ஆய்வுக்கும்,பொது அமைப்புகளின் ஒருமித்தக் கருத்துகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதைப் பற்றி  சிறிதும் கவலைப்படாமல் திட்டத்தைத் தன் மூப்பாக அறிவிப்புச்செய்திருக்கிறார் கல்வி அமைச்சர்.
நமது தேவை கேற்ப இத்திட்டத்தை வகுப்பதற்கு நம்மிடையே கல்வியாளர்கள் பெருமளவில்நிறைந்திருக்கின்றவேளையில்அந்நியரின்ஆலோசனைகளைஅரசாங்கம் கேட்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானா? நமது தேவைகளையும்,பாரம் பரியங்களையும் நன்கு அறிந்த மலேசிய மக்களுக்கே புரியும் என்பதால் இந்த திட்டத்தை நாமே வடிமைத்திருந்தால் பல்லின மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும். மக்களின் கனவுகளும் நிறைவேற்றப் பட்டிருக்கும்.
அரசாங்கம் மக்களுக்குப் போதிய விளக்கம் தராத நிலையில்,மக்கள் மிகவும் குழம்பியுள்ளனர்.இத்திட்டம் பற்றிய முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாமல் சூழலில் மலேசிய மக்கள் இருந்து வருகின்றனர்.தங்களின் தாய்மொழிகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்புகளை எதிர் நோக்கியுள்ள  சீனர்களும், இந்தியர்களும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.இது குறித்து பல கருத்துகளைப் பொது மக்களும்,பொது அமைப்புகளும் அரசுக்குத்தெரிவு படுத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அரசு தன் விருப்பப்படியே செயல் படுகிறது என்ற ஆதங்கத்தில் மக்கள் மனம் புழுங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தில், மலாய் மற்றும் ஆங்கில மொழிகளின் வளர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் அதன் வளர்ச்சிகள் பற்றி விளக்கமாகக் கூறப்படவில்லை. தமிழ் ஆரம்பப்பள்ளிகளில் மலாய் மற்றும் ஆங்கில மொழிகளின் வளர்ச்சிக்காக நேரம் கூட்டப்பட்டிருப்பதால்,தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்று நினைக்கும் மக்களின் அச்சத்திற்கு அரசு சார்பில் இதுவரையில் முறையான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழி வளர்ச்சி தொடர்ந்து எவ்வாறு மேம்படுத்தப்படும் என்ற தகவலும் இல்லை.தேவைக்கேற்ப புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்டப்படுமா என்ற கேள்வியும் தொடர்கிறது.
மலாய் மற்றும் ஆங்கில மொழிகளின் வளர்ச்சிக்காகப்போதிக்கப்படும் நேரம் கூட்டப்பட்டதன் காரணத்தைக் காட்டி, தமிழ்ப்பள்ளிகளில் மலாய் இன ஆசிரியர்களின் எண்ணிக்கையை கூட்டும் நோக்கத்தை அரசு கொண்டிருப்பதாக   எண்ணத் தோன்றுகிறது.மேலும்,தமிழ்ப்பள்ளிகளில் பணியாளர்களின் எண்ணிக்கையில் மலாய்க்காரர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக  உயர்வு கண்டு வருகிறது. இந்நிலை நீடித்தால்,  தமிழ்ப்பள்ளிகளின் முழுக்கட்டுப்பாட்டைதும் மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவர்.  தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் நிரந்திர அஸ்தமனத்தை ஏற்படுத்தும் எண்ணத்தை அரசு கொண்டுள்ளதா என்ற அனுமானத்தையும் புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தத் தவறவில்லை!
ஆரம்பப் பள்ளி,இடைநிலைப்பள்ளி,பல்கலைக்கழகம் வரையில் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப்பாடத்தை முறையாகப் பயிலத்தக்க வழிமுறைகள் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்ற மன ஆதங்கத்தைக் கொண்டுள்ள  தமிழ்ப் பெற்றோர்களுக்குத் தக்க விளக்கம் தருவது அரசின் கடமை அல்லவா?
மலாய் மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறியாகக் கொண்டு வரையப்பட்டுள்ள இக்கல்வித்திட்டமானது,தாய்மொழிகளைப் பயிலும் பிற மாணவர்களின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதை அனுமதிக்க முடியுமா? இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடி மகனுக்கும் முறையான கல்வியை வழங்குவது பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.வரி கட்டும் குடிமகனின் தேவையைப் பூர்த்தி செய்வது மிக முக்கியமாகும்.
இன,மத,மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.நாட்டின் வளப்பத்தில் பங்கு கொள்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசு இதற்கான இயல்பு நிலையை  முன்னெடுத்துச் செல்லவேண்டும்.திகில் தரும் மூடுமந்திரங்களைத் தவிர்த்து, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வெளிப்படையான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அறிவிப்பதில் சுணக்கம் காட்டும்போது, இயல்பாக அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பகத் தன்மையில் பாதிப்பு ஏற்படலாம்.
தாய்மொழியைக் காப்பதில்,தமிழ்ப்பெற்றோர்கள் மெத்தனப்போக்கைக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.தமிழ்ப்பள்ளிகளைக் காக்கும் வகையில் தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவேண்டும்.புதிய கட்டங்களைக் கட்டிக்கொடுப்பதில் அரசும் பாகுபாடு காட்டக் கூடாது.தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.ஆட்டை விரட்டிவிட்டு,கொட்டகையைப் பூட்டியக் கதையாகத் தாய்மொழியை இழந்து தறுதலைகளாகத் திரிவதைத் தவிர்ப்போமாக!
            “நாடு நடக்கிற நடையிலே; நமக்கே ஒன்றும் புரியலே!”

                                       முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம