முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழர்களின் உறக்கம் கலையட்டும்..

கட்டுரை
தமிழர்களின் உறக்கம் கலையட்டும்                                                   
               வே.ம.அருச்சுணன்

இந்நாட்டில் மலாய்க்காரர் அல்லாதார்,குறிப்பாக இந்தியர்கள் அமைதியாக வாழ நினைக்கின்றனர்.இதற்கு முக்கியக் காரணம்,இந்நாடு நாம் பிறந்த பூமி.இந்தப்பூமி அமைதிப் பூங்காவாகத் திகழவேண்டும்.உலகின் எந்தப் பகுதியில் இருந்து இங்கு வாழ்வு தேடி வரும் உயிரினங்களுக்கு  அடைக்கலம் தருவது நாம் கொண்டிருக்கும் மனிதநேய அடிப்படையில்தான்.மேலும்,பல்வேறு கலை கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் பல இனத்தவர்களுடன் புரிந்துணர்வுடன் அன்பு பாராட்டி ஒற்றுமையுடன் வாழ்வது அவசியமாகிறது.காட்டையழித்து நாட்டை உருவாக்கிய,இந்தியர்கள் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசாங்கத்திற்கும்,மன்னருக்கும் முழுவிசுவாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்தியர்கள் வழங்கி வருகின்ற பிளவு படாத ஆதரவை நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.நாட்டையாளுகின்ற பாரிசான் அரசாங்கமும் இந்தியர்களின் விசுவாசத்தை நன்கு அறிந்தே வைத்துள்ளனர் என்பது வெள்ளிடைமலை.
பலநிலைகளில் பின்தங்கியிருந்த,மலாய் மக்களின் உயர்வுக்கு இந்தியர்களின் ஒத்துழைப்பும்,விட்டுக்கொடுத்தலும் மிக அதிகம் என்றால் மறுப்பதற்கில்லை.நாட்டில் 1969 மே13 இல் நடந்த இனக்கலவரத்திற்குப் பின் நாட்டில் பூமி புத்தராக்களின் வளர்ச்சியில் சரசாங்கம் முனைப்பு காட்டியது.அதன்பயனாய்க் கிடுகிடுவென மலாய்க்காரர்களின் வளர்ச்சி இந்நாட்டில் மேலோங்கியது. உயர்ந்த நிலையில் பதவிவகித்த இந்தியர்கள் பலர் படிப்படியாக இறக்கம் கண்டனர்.அரசாங்க உயர் நிலைப்பதவிகளில் கண்துடைப்பிற்காக  அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படுகின்றனர்.நாளடைவில்,தமிழர் இனம் இந்நாட்டினின்றும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் கொளுந்துவிட்டு எரிகிறது.நாட்டில் அவ்வப்போது நடைபெற்றுவரும் உணர்ச்சிமயப்போக்குகளால் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகிப்போயுள்ளது. நாட்டின் வளர்சிக்காக உழைத்து உருகுழைந்து போன இந்திய சமூதாயத்திற்கு அநீதிகள் வரிசைப் பிடித்து நிற்கின்றன.
நாட்டின் பதின் மூன்றாம் தேர்தலில்,ஆளும் பாரிசான் குறைந்த எண்ணிக்கையில் வெற்றிக்கனியைப் பெற்று நாட்டையாளும் தகுதியைப்பெற்ற பின்னரும்,இந்தியர்களுக்குச் சாதகமான அலைகள் வீசாமல் இருப்பதுடன்,பிரதமர் நஜீப் இந்தியர்கள் எதிர்பார்த்த இசைவு நிலையிலிருந்தும் மாறுபட்டிருக்கிறார்.தேர்தலின் பரப்புரையின்போது வாக்களித்த 1500 இந்திய மாணவர்களின் மெட்டிகுலேஷன் இடங்களைத் தருவதில் பிரதமர் இன்று வரையில் மௌனம் காப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.இந்நாட்டு இந்திய சமுதாயம் போராட்டம் நடத்தியே வாழ்வை இழக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவது போல் தெரிகிறது.
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல்,அவ்வப்போது அரசியல் தலைவர்களும்,கல்வி மான்களும் நம்மை வம்புக்கு இழுப்பது வாடிக்கையான செயலாகிப்போனது வருத்தமாக இருக்கிறது.இந்தியர்களுக்கு எதிராகச் சினமூட்டும் நடவடிக்கையில் திட்டமிட்டே இருங்கி, நம்மை அமைதியுடன் வாழவிடமறுக்கும் மனப் போக்கினால்,நாம் இழிச்சவாயச் சமுதாயமாக இருக்க வேண்டிய கேவலமான நிலைக்குத் தள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது.               
தமிழர்களுக்கு இந்நாட்டில் இந்தியச் சமுதாயத்திற்குத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எடுத்துக் காட்டாக அமைகிறது,அண்மையில்,பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, சுங்கை பூலோ, ஸ்ரீ பிரிஸ்தானா தேசியப் பள்ளியில்,நோன்பு மாதத்தில்,முஸ்லிம் அல்லாத மாணவர்களை பள்ளி சிற்றுண்டி சாலையில் உணவு உண்ணவிடாமல் உடைமாற்றும் அறையில் உணவு உண்ணும்படி பள்ளி நிர்வாகம் பணித்துள்ளது.இது பெரும் தவறு.கல்வி அமைச்சரின் அனுமதியின்றி பள்ளித் தலைமயாசிரியரின் தன்மூப்பான இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ருக்குன் நெகார கோட்பாட்டுக்கு எதிரானது.இனநல்லுறவுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியது.
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இன,மத வேறுபாடின்றி சகல வசதிகளையும் செய்து தருவது உலகுக்கு நல்வழிகாட்ட வேண்டிய கல்வியாளரான ஒரு தலையாசிரியரின் தலையாயக் கடமையாகும்.ஆனால்,இந்தியர்களின் குழந்தைகள் தானே என்று வழக்கம் போல் இவரும் தான்தோன்றித் தனமாகவும் அலட்சியமாகவும் நடந்து கொண்டது, இரக்கமின்றி  ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையில் ஈடுபட்ட தலைமையாசிரியர் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து தலைமையாசிரிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரை கல்வி அமைச்சு உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் அல்லது பணி நீக்கம் செய்து கல்வி அமைச்சின் நேர்மையைக் காட்ட வேண்டும்.நாட்டின் நற்பெயருக்கு மாறாத கலங்கத்தை ஏற்படுத்தியவருக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது.
மேலும்,நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின்  நன்மை கருதி அவருக்கு இந்த தண்டனையை வழங்குவது அவசியமாகிறது. கல்வி அமைச்சரும் துணைப்பிரதமருமான டான்ஸ்ரீ முகமது யாசின் தக்க நடவடிக்கை அவர்மீது எடுக்க உடனே முனைப்பு காட்ட வேண்டும்.எதிர்காலத்தில் பிரதமராகும் அவரது கனவு நனவாக இந்தியர்களின் ஓட்டு அவசியம் அல்லவா? இந்தியர்களைக் கிள்ளுக்கீரையாகவும்,எடுப்பார் பிள்ளையாகக் கருதும்  போக்கிற்கு நிரந்திரமாகச் சாவுமணி அடிப்பதுடன்,  இந்தியர்களின் உள்ளங்களில் ஆறாப் புண்ணாக இருக்கும் வீற்றிருக்கும் இந்த வடுவைப் போக்க வேண்டும்.
தமிழர்கள் ஒன்றுபடவேண்டிய நேரம் வந்து விட்டது.நாட்டின் பதின்மூன்றாவது பொதுத்தேர்தலுக்குப் பின் நாம் நமது நிலையில் நிறைய மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.இது காலத்தின் கட்டாயம்.கடந்த காலங்களைப் போன்று இனியும் கண்மூடித்தனமாக வாழ முடியாது. குறிப்பாக,தமிழ்மொழியைக்காக்க வேண்டிய நிலையில் நாம் வாழ்கிறோம்.கண் கெட்டப் பின் சூரிய வணக்கம் பயனளிக்காது.மொழி இனத்தின் விழி.மொழியை இழந்தால் நமது இனத்தின் அடையாளத்தை இழந்துவிடுவோம்.தமிழ்ப்பிள்ளைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவோம்.
கற்றறிந்த தமிழ்ப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைத் தயக்கம் காட்டாமல் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி நமது உரிமையைக் காக்க உதவ வேண்டும்.அண்மைய காலமாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்விக்கேள்விகளில் செய்துவரும் சாதனைகளப் பார்த்தாவது  பெற்றோர்கள் மனம் திருந்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்ப்பள்ளிகளில் சீன மாணவர்களைப் போல் விண்ணைத் தொடவேண்டும்.சாதனை புரியும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டுவோம்.நமது மொழிப்பற்றைக் கண்டு அரசாங்கம் நமது பள்ளிகளை மூடும் எண்ணத்தை முறியடிப்போம்.
தேசியப் பள்ளிகளில் பயிலும் நமது பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளும்,பிரித்தாளும் கொள்கையாளும் நம்மில் பலருக்குத் தெரிந்தும் தமிழ்மொழியின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாகத் தொடர்ந்து வேற்று பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி வைத்து தமிழை இந்நாட்டிலிருந்து நிரந்தரமாக அழிக்க முனைந்துள்ள கொடுமையைத் தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.தமிழை மறப்பவன் பெற்ற தாயை மறந்தவன் ஆகிறான்.வக்கற்றவன் மட்டுமே தமிழைப் பயிலும் மொழியாகக் கற்றோர் காட்ட முனைவது அநீதி அல்லவா? தமிழால்,தமிழனால் எதுவும் முடியும் என்பதை, வசதி படைத்த கற்றோர் தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வரிசைப் பிடித்து நிற்க வேண்டும்.பாமர மக்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ வேண்டும்.
மானிட வாழ்வு மாண்புற,இறைவனால் அருளப்பட்ட தேவாரம்,திருவாசகம் இன்னும் பல அரிய பாக்கள் மக்களுக்கு வழிகாட்டத் தமிழில் பாடப்பட்டதல்லவா? இறைவன் தந்த தமிழைக் கற்பது நமது பேறு அல்லவா?அதனை நாம் கற்பதில் பெருமை அடைய வேண்டாமா?உலகில் பழமையான மொழிகளில் இன்னும் பசுமையோடு உலா வரும் தமிழ், திருக்குறள்  எனும் அறநூலை உலகம் மக்கள் உய்யும் பொருட்டு அருளிய தெய்வப்புலவர் தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் அழியா புகழை ஏற்படுத்திய தெய்வப்புலவரின் பணியைத் தொடர்வது நமது கடமையல்லவா?                 
மொழி உணர்வு மிக்க  இந்நாட்டு சீன சமுகத்தின் அணுகுமுறையை நாமும் பின்பற்றுவது தவறில்லை.சீனர்களின் மொழி ஈடுபாடு நமது தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவிவருவதை ஒரு கணம் எண்ணிப்பார்ப்பது அவசியம். தமிழ்ப்பள்ளிகளின் இரக்கம் எதிர்காலத்தில்,அரசாங்கத் தேர்வுகளில் தமிழ் பொழியை எடுக்கும் நமது எதிர்கால சந்ததியினரின் கனவில் மண் விழுவதற்கொப்பாகும்!
தமிழர்களின் கலை,பண்பாடு,இந்நாட்டில் நீடித்த வாழ்வை உறுதி செய்ய தமிழர்கள் அனைவரும் தமிழுக்காக ஒன்றிணைவோம்.இனியும் நம்மை யாரும் இகழ்ச்சியுடன் பார்பதற்கும்,கேவலமாக  நம்மை நடத்த நினைப்போருக்கு நாம் யார் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். கருத்து பேதமின்றி,கட்சி பேதமின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.நாம் சாதிக்க வேண்டிய பல சாதனைகள் மலை போல் கண் முன்னே உயர்ந்து நிற்கின்றன.நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்; சாதித்துக் காட்டுவோம். தமிழர்களின் நீண்ட உறக்கம் விரைவில் கலையட்டும்!
                                            முடிவு




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை