முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசி

:                      பசி                                            
               வே.ம.அருச்சுணன்

“கேசவா....! கேசவா....!
“தூங்கிட்டுதானம்மா இருக்கேன்....!
“இன்றைக்கு நீ பள்ளிக்குப் போகனும்...... தெரியுமில்ல?
“எனக்குத் தெரியும்மா....!”
“சண்டைச் சச்சரவுன்னு.....!”
“அம்மா.....நான் படிக்கத்தான் பள்ளிக்குப் போறேன்.....!”
“ம்.....உன் லட்சணம்தான் ஊருக்கே நல்லா தெரியுமே....!”
“விடிஞ்சும் விடியாததுமா.....ஏம்மா இப்படி பேசி எனக்கு வீணா   டென்ஷன உண்டாக்குறீங்க.இப்ப உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க.....?
“பள்ளிக்குப் போனமா.........ஒழுங்காப் படிச்சமா.........வீட்டுக்குத் திரும்பினோமான்னு இருக்கனும்”
“படிக்காம கண்ட பசங்களோட தினம்  சண்டைப் போடுறமாதிரியில்ல நீங்க சொல்றீங்க....?”
கேசவன் சொன்னது எதையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அம்மா அவசரமுடன் வேலைக்குச் செல்வதையே கேசவன் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
சிலவினாடிகள் உடலை முறுக்கிறான்.அந்த உடல் முறிப்பு அவனுக்கு இதமாக இருக்கிறது.எனினும் அவன் படுக்கையிலிருந்து உடல் சோர்வுடன் எழுகிறான்.முதல் நாள் சமையல் சரியில்லாததால்,அரையும் குறையுமாகச் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றவனின்.வயிறு காலையிலேயே பசியால் கிள்ளத்தொடங்குகிறது.
பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்று எண்ணிய வேளை, ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்தது அப்போது நினைவுக்கு வருகிறது.ஆசிரியரிடம் திட்டு வாங்குவது நிச்சயம்  என்பதை எண்ணிப்பார்க்கும் போதே அந்தக் காலை நேரத்திலேயே அவனது இருதயம் வேகமாக இயங்குகிறது .உடம்பு வியர்க்கத் தொடங்குகிறது.
அவசர அவசரமாக காலைக்கடன்களை முடித்துக் கொண்டவன் சாப்பாட்டு அறைக்குச் சென்று சாப்பிட ஏதும் இருக்கிறதா என்று பார்க்கிறான்.வழக்கம் போல் சாப்பிடுவதற்கு ஏதும் அம்மா செய்து வைத்திருக்கவில்லை.காலையிலேயே மனச் சுமையுடன் பள்ளிக்குச் செல்கிறான்.
அரை மணி நேர நடைக்குப் பிறகு தன் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பள்ளியை அடைகிறான். அப்போது, பள்ளிப் பேருந்து ஒன்று பள்ளி நுழைவாயில் நிற்கிறது.காலை மணி ஏழைக் காட்டுகிறது.இன்னும் அரை மணி நேரத்தில் வகுப்புகள் தொடங்கிவிடும். மாணவர்கள் சுறுசுறுப்புடன் பள்ளிப்பேருந்திலிருந்து இறங்குகின்றனர். சிலர்  வகுப்பறைகளுக்கும் சிலர் சிற்றுண்டிச்சாலைக்கும் செல்கின்றனர். அமுதன்   பள்ளிச்சிற்றுண்டிச்சாலையை நோக்கி வேகமாகச்  செல்கிறான்!
“அமுதன்.....ஏன் இன்றைக்கு அரை மணி நேரம் லேட்டா வர்ர?”  அமுதனுக்காகக் காத்துக்கொண்டிருந்த கேசவன் உரிமையோடு கேட்கிறான்.
“வரும் வழியில ஒரு விபத்து நடந்து போச்சு கேசவன். மோட்டோரை வேகமாக ஓட்டிவந்த  இளைஞன்  எதிரே வந்த காரோடு மோதி ஸ்தலத்திலேயே இறந்து போனான்.விபத்து நடந்த இடத்தில அதிகமான வாகன நெரிசல். நான் பயணம் செய்த பேருந்தும் நெரிசலில் சிக்கிடுச்சு. டிராபிக் போலிஸ்காரர்கள் மிகுந்த சிரமப் பட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பியதில் நேரம் ஆயிடுச்சு” கவலையில் அவன் முகம் கறுத்திருந்தது!
“இளஞர்கள் ஏன்தான் சாலையிலே மோட்டோரை ஓட்டும்போது பாதுகாப்புப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் ஆபத்தான முறையில வாகனங்களை ஓட்டுகிறார்களோ தெரியல! ச்சே........ என்ன இளைஞர்கள் இவர்கள்?”
“அது கிடக்கட்டும்.....தலையெழுத்துபடிதான் எதுவும் நடக்கும்.நாம வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது? கேசவன்.....நீ பசியாறிட்டியா...?”
“இன்னும் இல்ல அமுதன்.....அதான் உன்னக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்....!”
“சரி வா.....கண்டினுக்குப் போவோம்.....!”
பள்ளிச் சிற்றுண்டிச் சாலையில் பலர் உணவை அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.கேசவனும் அமுதனும் ஒரே தமிழ்ப்பள்ளியில் ஒன்றாகப் பயின்றவர்கள்.இப்போதும் மூன்றாம் படிவத்தில் இருவரும் ஒரே வகுப்பில்தான் படித்துக்கொண்டிருந்தனர்.
அமுதன் பெரிய வசதிபடைத்தவன் என்று சொல்லாவிட்டாலும் கேசவனுக்குத் தினம் உணவு வாங்கிக்கொடுக்கும் பெரிய மனசு கொண்டவன்.தினமும் அம்மா கொடுக்கும் ஐந்து ரிங்கிட்டில் கேசவனின் பசியைத் தணித்துக் கொண்டிருந்தான்.கேசவன் பள்ளிக்கு மட்டம் போடாமல் பள்ளிக்கு வருகை தருவதற்கு அமுதன் முக்கியப் பங்கினைச் செய்து கொண்டிருந்தான்.
அன்று மாலையில் பள்ளியில் புறப்பாட நடவடிக்கை. காற்பந்து விளையாட்டைச் சொல்லித்தரும் ஆசிரியர் ஆறுமுகம் மாணவர்களை  இரு குழுக்களாகப் பிரித்து விளையாடச் செய்கிறார்.கேசவனும் அமுதனும் ஒரே குழுவில் விளையாடுகின்றனர்.மாணவர்கள் மும்முரமாக விளையாடுகின்றனர். ஆசிரியர் நடுவராக இருந்து விளையாட்டைக் கண்காணிக்கிறார்.ஆட்டத்தின் நடுவே  மாணவர் ஒருவர் பந்தை உதைக்கும் போது எதிர்பாராதவிதமாக அமுதனின் காலில் படுகிறது.
“ஐயோ........!” அலறியவாறு தரையில் சாய்கிறான் அமுதன்.உதவிக்கு ஓடுகிறான் கேசவன். 
“எல்லாரும் விலகி நில்லுங்கள்...!” முதலுதவி கொடுக்கிறார் ஆசிரியர்.
வலியால் துடிக்கும் அமுதனை விளையாட்டாளர்கள் பதற்றமுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேர்கிறது.அடுத்த சில நிமிடங்களில் அமுதனை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனை நோக்கி மின்னலாய்ப் பறக்கிறது.அன்றைய விளையாட்டுப் பயிற்சி அத்துடன் முடிவடைகிறது.கவலையுடன் மாணவர்கள் இல்லம் திரும்புகின்றனர்.
கால் முறிவுக்காக,அமுதன் சில வாரங்கள் மருத்துவமனையில்  தங்க வேண்டுமாம்.
அம்மாவின் நச்சரிப்புக்குப் பயந்து, கேசவன் மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்கிறான்.தளர்ந்த நடையுடன் ஏதோவோர் சிந்தனையில் வழக்கம் போல் அவன் செல்லும் சிற்றுண்டிச் சாலையை நோக்கிச் செல்கிறான்.
பள்ளியில் நண்பன் தன்னுடன் இல்லாமல் இருப்பது அவனுக்கு மன சஞ்சலத்தைத் தந்தது.எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தான்.அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.பசி வேறு அவன் வயிற்றை அகோரமாகக் கிள்ளுகிறது.மயக்கம் வருவது போல் உணர்கிறான்.சிற்றுண்டிச்சாலையில் போடப்பட்ட நீண்ட நாற்காலியில் அமர்கிறான்.வானில் அவன் எங்கோ பறப்பது போல் பொறி தட்டுகிறது. சற்று நேரத்தில் அவனுக்கு இருட்டிக் கொண்டு வருகிறது.சடாலென்று தரையில் சாய்கிறான்.
காலையில் பசியாறிக் கொண்டிருந்த சில மாணவர்கள் தரையில் சாய்ந்து கிடந்த கேசவனைத்தூக்கி மேசையில் படுக்க வைக்கின்றனர்.காலைவேளையில் அங்கு சிறிது பரபரப்பு ஏற்படுகிறது. மாணவர்கள் சிலர் வேடிக்கைப்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.மாணவர் நலப்பொறுப்பாசிரியர் விமலா அங்கு வரவே,அவர் உடனே கேசவனுக்கு முதலுதவி செய்கிறார்.
“ரொம்ப நன்றிங்க டீச்சர்.....!”
சுடச்சுட மைலோவுடன் சில ரொட்டித் துண்டுகளையும் உண்ட பின் தெம்புடன் பேசுகிறான் கேசவன்.சிறு வயதில் தானும் பசியினால் மயங்கிய காலத்தை எண்ணிப்பார்க்கிறார் விமலா.பசியின் கொடுமை அவருக்குத் தெரிந்ததுதான். சமயத்தில் தமிழ் மாணவர்களுக்கு முடிந்ததை அவர் செய்யத் தவறுவதில்லை! தொழிலுக்கு ஏற்ற இரக்கம் அவரிடம் இருந்தது.
அமுதன் பள்ளிக்கு வந்து ஒருவாரம் கடந்திருந்தது.வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்வான் கேசவன். கல்வியில் கருத்தூன்றிப் பயில அவனால்  இயலவில்லை.
வழக்கமாக அன்றும் காலையில் பசி அவனை  வாட்டியது!
தொழிற்சாலையில் வேலை செயும் அம்மாவுக்குக் குறைந்த வருமானம்.அப்பாவின் திடீர்  இறப்பு குடும்பத்தைப் புரட்டிப் போட்டிருந்தது.வாடகை வீடு.மூன்று வேளையும் திருப்தியாக உண்ட நாட்கள் விரல் விட்டு எண்ணும் படியாக இருந்தது.காலை பசியாறல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கும் சூழல்.அம்மாவைக் குறைபட்டுக் கொள்வதில் பயனில்லை என்பது அவனுக்கு விளங்கும்.இளமையிலேயே கணவரை இழந்தவர்.குறைந்த கல்வியைக் கொண்டு உயர்ந்த வருமானத்தை அவரால் ஈட்ட முடியவில்லை!
இளைத்துக் காணப்படும் அவனது உடல் வாகு வறுமையைத் தெளிவுபடுத்தும்.உடல் திடகாத்திரம் இன்மையினால் அவன் பல வேளைகளில் வாய்பேசாமல் மௌனமுடன் இருப்பான்.
“உண்மையைச் சொல்......!”
“சாப்பிடத்தான் காசு கேட்டேன் ஐயா!”
“கேங்குக்குக் காசு கேட்டதாப் புகார் வந்திருக்கு...!”அதட்டுகிறார் கட்டொழுங்கு ஆசிரியர்.
“ஐயோ......அம்மா.....!” கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் சாய்கிறான்.
“கடவுளே....!”
காவல் துறையின் கார்கள், பெரிய உறுமலுடன் பள்ளி வளாகத்தில் வேகமாய் நுழைகின்றன!

                                       முடிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...